இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

வணங்காமுடி பதில்கள் (02-08-2010)

E-mail அச்செடுக்க

 

 

 

அரசு பள்ளிக்கூடங்கள் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு இணையாக கல்வி தரத்தில் முன்னேறாதது ஏன்? - உமா சங்கர்

புத்தம்புது அழகிய கட்டடம், விலை உயர்ந்த சீருடை, உயர்ந்த கல்விக் கட்டணம், பள்ளி ஊர்திகளில் பள்ளிக்குக் கொண்டு விடல் என்பனவற்றால் தனியார்ப் பள்ளிகளில் கல்வித் தரம் மேம்படுவதுமில்லை; பழைய கட்டடம், எல்லோரும் வாங்கத்தக்க சீருடை, மிகக் குறைந்த கல்விக்கட்டணம், நடந்தோ மிதிவண்டியிலோ அல்லது பேருந்திலோ பள்ளிக்குச் செல்லல் என்பனவற்றால் அரசுப்பள்ளியின் கல்வித்தரம் குறைவதுமில்லை..

ஆசிரியப்பணி என்பது கூலிக்கு மாரடிக்கும் பணியன்று. ஒரு நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் பொறுப்பான பணி. அரசுப் பள்ளிகளானாலும் தனியார்ப் பள்ளிகளானாலும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் தம் பணியின் பொறுப்பையும் மதிப்பையும் உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே கல்வித்தரம் உயரும்; நல்ல மாணவர்கள் உருவாவர்.

அரசுப்பள்ளிகள் தனியார்ப் பள்ளிகளுக்கு இணையாகக் கல்வியில் முன்னேறவில்லை என்று நினைப்பது ஒரு மாயை என்பதை, அரசு மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் பயின்றோர் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றுள்ள இந்த ஆண்டு வெளிவந்த தேர்வு முடிவுகள் புலப்படுத்துகின்றன.

தனியார்ப்பள்ளிகளுக்கிடையேயான போட்டியில், மிக உயர்ந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை மட்டுமே தம் பள்ளிகளில் சேர்த்து,சிறப்பு வகுப்புகள் நடத்தி,வெற்றி விகிதத்தை உயர்த்திக்காட்டும் போக்கு நிலவுகிறது. இதனால் அப்பள்ளிகளில் சேர மாணவர் மற்றும் பெற்றோரிடையே ஆர்வம் அலை மோதும். ஆனால் அரசுப்பள்ளிகளில் அந்த நிலை இல்லை. எல்லா மாணவர் களையும் சேர்த்து, அவர்களைப் பயிற்றுவித்து நல்ல மதிப்பெண்கள் பெறச் செய்கிறார்கள்.

கல்வித்தரம் என்பது பள்ளியைப் பொறுத்தில்லை; படிப்பிப்பவர்களையும் படிப்பவர்களையும் பொறுத்தே அமையும்..



இரத்தம் தானம் வழங்குவதால் உடலுக்கு ஏதாவது தீங்கு நேர வாய்ப்புள்ளதா? - ராஜீவ்

இல்லையே! உலகெங்கிலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கொடுக்கும் இரத்தக் கொடையால் எத்தனை உயிர்கள் மரணத்தின் விளிம்பில் இருந்து மீட்கப்படுகின்றன.

நல்ல உடல்நலத்துடன் இருக்கும் ஒருவரின் உடலில் 5 முதல் 6 லிட்டர் வரை இரத்தம் இருக்கும். இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200,/ 300 மி.லி. இரத்தம்வரை கொடுக்கலாம். கொடுத்த இரத்தம் புதிதாக மீண்டும் உற்பத்தியாகிவிடும். இரத்த தானம் செய்வதால் உடலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.


"அமைதி பணிகளில் தாலிபான்களையும் உட்படுத்த ஆலோசிக்கப்படுவதாக" சமீபத்தில் செய்தி ஒன்று வாசித்தேன். அதிர்ச்சியாக இல்லையா? - பார்த்திபன்

அது அந்நாட்டு அரசுகளின் முடிவு. இதில் ‘நீங்கள்’ அதிர்ச்சியடைய என்ன இருக்கிறது?

அந்த அரசுகள் அவர்களை நம்பும்போது, அந்நாட்டுக் குடிமக்களான அவர்களையும் அமைதிப்பணியில் ஈடுபடுத்தலாமே?


மாணவிகளின் மீது வன்கொடுமை புரியும் ஆசிரியர்களிடமிருந்து மாணவிகளைக் காப்பதற்கு ஆலோசனை கூறுங்களேன். - முருகன்

அந்தப்பேயை ஓட்டுவதே வழி.

மாணவிகள், காமப்பிசாசின் பார்வையாலேயே அவனை அடையாளம் கண்டு தம் பெற்றோரிடம் சொல்லித் தம்மைத் தற்காத்துக்கொள்லலாம்.

கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் செய்யலாம். "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் நடத்த" வந்த புதுமைப் பெண்கள் நேரடியாகவே அந்தப் பேயை அடித்து விரட்டலாம்.


சீமான் தமிழக முதல்வராக வர வாய்ப்புள்ளதா? - குகன்

அது தமிழ்நாட்டு மக்களின் கையில் உள்ளது.

சீமான் என்ன தமிழர்களுக்கு வேண்டாதவரா?


இந்தியாவுக்கு சர்வாதிகார ஆட்சிதானே சிறந்தது? பின்னே என்ன ஸார் - அதில் ஒரு அயோக்கியனை சமாளித்தால் போதும். நாம ஒவ்வொரு அயோக்கியனையும் அல்லவா சமாளிக்க வேண்டியுள்ளது? - சங்கர்

உங்கள் வினாவில் விரக்தி தொனிக்கிறது. அராஜக அரசியல்வாதிகளின் அட்டகாசங்களால் வெறுத்துப்போய் இப்படி வினவியுள்ளீர்கள்.நீங்களும் உட்படும் இந்திய வாக்காளர்களே அராஜக அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுக் கின்றனர். கட்சி, சாதி, மதம், இனம்,மொழி எனப்பார்த்து வாக்களிப்பதால் நல்ல, பண்பானவர்கள் சட்டமன்றத்திற்கோ நாடாளும் மன்றத்திற்கோ போக முடிவதில்லை. தேர்தல்களில் மக்கள் சாதி,மதம்,இனம் இவற்றை பாராமல், பணம் பெறாமல் வாக்களிக்கத் தொடங்கினால் நல்லவர்கள் நம்மை ஆளும் சூழ்நிலை உருவாகும்.

ஜனநாயகம்தான் இம்மாபெரும் நாட்டை ஒன்றாக ஒருமைப்பாட்டுடன் வைத்திருக்கிறது. சர்வாதிகார நாடுகள் சிதறுண்டதை அல்லது சர்வாதிகாரிகள் விரட்டப்பட்டதைச் சமகால வரலாறு காட்டிக்கொண்டிருக்கிறதே!


நல்லவனாக இரு என்கிறார்கள்...ஆனால் நல்லவனாக இருந்தால் பி்ழைக்கத் தெரியாதவன் என ஏசுகிறார்களே??? - நெய்னா முகமது

நல்லவனாக இருந்தால் பி்ழைக்கத் தெரியாதவன் எனச் சொல்வது ஒருவிதப் பொறாமையினால்தான்.

சான்றுக்கு:-- நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் பொறுப்பான இடத்தில் நீங்கள் நாணயமாக இருப்பதால் நிறுவனம் உங்களுக்குத் தனி மதிப்புத் தரலாம். அதைப் பொறாதவர்கள் உங்களைக் கவிழ்க்க "பிழைக்கத் தெரியாதவன்" என உசுப்பி விடலாம். நல்லவரான உங்களின் நாணயத்தால் தினமும் இரவில் நிம்மதியான உறக்கமும் விடியும்போது மகிழ்ச்சியான விழிப்பும் கிடைக்கும். மற்றவர்களின் பேச்சைக்கேட்டுப் "பிழைக்க"த் தொடங்கினால் உறக்கமும் மகிழ்ச்சியும் போயேபோச்!அத்தோடு உங்களை உசுப்பி விட்டவர்களின் மிரட்டலுக்கும் ஆளாக வேண்டி வரலாம்.

நீங்கள் குடும்பத்தில் அல்லது சமுதாயத்தில் நல்லவனாக இருக்கும்போது, பிறருக்காக உடலாலும் பொருளாலும் உதவிகள் செய்யலாம். இதைப் பொறாதவர்களும் "பிழைக்கத்தெரியாதவன்" எனக் கேலி பேசலாம்..இவர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்:-- நல்லவனாக மட்டும் இருந்தால் போதாது; வல்லவனாகவும் இருக்க வேண்டும். உங்களைச் சுற்றியும் உங்கள் பார்வை இருந்தால்தான் நீங்கள் நல்லவர் என்பதும் நிலைக்கும்.

 

பூமிக்கும் நதிகளுக்கும் பெண்களின் பெயரை வைத்து கண்ணியப்படுத்தும் நாம் நடைமுறையில் இழிவுபடுத்துவது எதனால்? - ஆஷா

பெண் பெயர் கொண்ட நதிகள் மட்டுமின்றி நிறையப் பெண்தெய்வங்களும் உள்ள நாடு இந்தியா. பெண் பெயர்களில் நதிகள் அழைக்கப்பட்டாலும் அவற்றால் ஆண்களுக்கு ஏதும் தொல்லையில்லை. நதிகளின் பெயர்கள் அல்லது பெண் தெய்வங்களின் பெயர்களை வைத்திருக்கும் பெண்கள் கூட இந்தியாவில் வரதட்சணைக் கொடுமையாலும் குடும்ப வன்முறைகளினாலும் பாதிக்கப்படுகின்றனர்.

நடைமுறையில் ஆணாதிக்கம் மிகுந்திருப்பதை மறுக்க முடியாது.


 

சீரியஸான மேட்டர்களை விளையாட்டாகவும் விளையாட்டை சீரியஸாகவும் எடுப்பவர்கள் இந்தியர்கள் என்கிறார் எனது இலங்கை நண்பர். (முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கருவறுக்கப்படும்போது நீங்கள் ஐபிஎல்லை ரசித்துக் கொண்டிருந்தீர்களே என்கிறார்) - நரேன்

அப்படி முடிந்த முடிவாகச் சொல்ல முடியாது.

முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கருவறுக்கப்படும்போது நீங்கள் ஐபிஎல்லை ரசித்துக் கொண்டிருந்தீர்களே என்று அவர் காரணம் எல்லாம் சொல்வது தவறு.

தினமும் உலகில் எங்காவது ஒரு மூலையில் இனப்படுகொலை நடந்துகொண்டுதான் இருக்கிறது. இஸ்ரேலினால் தினமும் பாலஸ்தீனியர் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதற்காகப் பிற அரபு நாட்டு மக்கள் தம் வேலைகளையும் விளையாட்டுகளையும் நிறுத்திவிட்டார்களா? ஐ பி எல் விளையாட்டை ரசிப்பதனால் விளையாட்டை ஸீரியஸ்ஸாக எடுப்பதாகக் கூறுவது உங்கள் நண்பரின் இந்திய விரோதப் பார்வை.

இந்தியாவின் தேசீய விளையாட்டான ஹாக்கியை ஸீரியஸ்ஸாக எடுத்துக்கொண்டிருந்தால் கோப்பை நம்மிடமேயல்லவா இருந்திருக்கும்.?ஒலிம்பிக்கில் எத்தனையோ தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றிருப்போமே?

அதுபோல ஸீரியஸ்ஸான மேட்டர்களை விளையாட்டாக எடுப்பதாக அவர் கூறுவதும் அவரின் இ.வி.பா.தான்.

பாபர்மசூதி இடிக்கப்பட்டதையோ, மும்பை மற்றும் குஜராத் கலவரங் களையோ,குஜராத்தின் முஸ்லிம்களைப் படுகொலை செய்ததையோ அல்லது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மும்பையில் நடத்திய வெறியாட்டத்தையோ இந்தியர்கள் யாரும் விளையாட்டாகக் கருதியதில்லையே?

இலங்கையில் தமிழர்களைச் சிங்களர்கள் இனப்படுகொலை செய்தபோது அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் தமிழக முதல்வர் எம் ஜி ஆரும் இணைந்து விடுதலைப்புலிகளுக்குப் பணமும் ஆயுதமும் இந்தியாவில் ஆயுதப் பயிற்சியும் வழங்கியதும் விளையாட்டாகவா? தமிழக மண்ணில் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதை இந்தியர்கள் விளையாட்டாக எடுக்கவில்லை; ஸீரியஸ்ஸாக எடுத்தனர் என்பதையும் உங்கள் இலங்கை நண்பருக்குச் சொல்லுங்கள்.


 

வெறுப்பு நெருப்பு மூட்டி பகை புகையை கக்கும் பத்திரிகைகளின் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்? - இப்னு அலிய்

PRESS COUNCIL OF INDIA அமைப்புக்குப் புகார் தெரிவிக்கலாம்.


கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் இங்கே க்ளிக்கவும்.
கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: mohamed ali, August 05, 2010
நல்ல கேள்வி பதில் . அருமை

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்