வான்வெளி ஆய்வாளர்கள் "வடக்கு வெளிச்சங்கள்(aurora borealis)" எனப்படும் ஒரு அற்புத ஷோவிற்குத் தயாராகி உள்ளனர். சூரியன் தனது பதினொரு வருட மௌனம் கலைத்து சோம்பல் முறித்து எழுந்து வருவதைத் தொடந்து அதில் மிகப்பெரும் வெடிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
அந்த வெடிப்புகள் டன் கணக்கில் பிளாஸ்மாவை ( செறிவேற்றப்பட்ட அணுக்கள்) விண்ணில் அள்ளித்தெளிக்கின்றன. தற்போது பூமியை நோக்கி வரும் அவை இங்கு ஒரு மெகா வானவேடிக்கையே நிகழ்த்திக்காட்டப்போகிறது. (ரொம்ப ஆசை வேண்டாம் ... பூமியின் வடக்கு பகுதியில் மட்டும் தான் அவை தற்போது தெரியும்)
"நெடுங்காலத்திற்கு பிறகு பூமியை நோக்கி நிகழும் ஒளிச்சிதறல் இதுதான்" என்கிறார் ஹார்வார்ட் ஸ்மித்சோனியன் வானியற்பியல் மன்றத்தின் தலைவர் லியோன் கோலுப்.
சூரியனின் உள்ளே நிகழும் மாற்றங்களை ஆராய கடந்த பிப்ரவரியில் செலுத்தப்பட்ட NASA வின் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேடரி கோரோணல் மாஸ் எஜெச்ஷன் எனப்படும் இந்த சூரிய வெடிப்புக்களைக் கண்டறிந்தது.
பொதுவாக இதுபோன்ற வெளிச்சங்கள் அலாஸ்கா மற்றும் கனடிய பகுதிகளில் மட்டுமே தெரியும். ஆனால் இம்முறை "பச்சையும், சிவப்பும் கலந்த இந்த மகரந்த ஒளி, வட அமெரிக்க பகுதியில் கூட தெரியும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது
சூரியனில் ஏற்படும் ஒளி சிதறல் பூமியின் காந்த அலைவரிசையின் படி துருவங்களுக்கு இயைந்து ஒழுங்குற பயணிக்க ஆரம்பிக்கும். அப்போது இவை வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் அணுக்களுடன் மோதி நியான் வெளிச்சம் போல் ஒளிர ஆரம்பிக்கும்.
நமது கிரகத்தின் காந்தவெளியுடனான சூரிய பொருட்களின் இதுபோன்ற மோதல்கள் வானவேடிக்கை காட்டுவதோடு நின்றால் பரவாயில்லை. சில சமயங்களில் புவிகாந்த புயல்களை ஏற்படுத்தவோ அல்லது பூமியின் காந்தமண்டல அடுக்கில் சலனங்களை ஏற்படுத்தவோ இவற்றால் முடியும் என்பதுதான் கவனத்துடன் எச்சரிக்கையாக அணுக வேண்டிய விஷயம்.
இதற்க்கெல்லாம் மூல காரணி சூரியனின் சுழற்சி முறையிலான சலனம்தான். அது பொதுவாக பதினொரு வருடம் நீடிக்கிறது. இந்த சூரிய வெடிப்பும் அதன் காரணமான வான்வெளி ஷோக்களும் சூரியன் தனது சுழற்சி முறையிலான சலனத்தில் உச்சத்தை நோக்கி நகர ஆரம்பித்து விட்டது என்பதைக் காட்டும் அடையாளமே.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




