ஈரான் அதிபர் அஹ்மதி நிஜாத் மீது கிரனேடு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் மயிரிழையில் உயிர்பிழைத்ததாகவும் வெளியான செய்தி உண்மையல்ல என ஈரான் அரசின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான ப்ரஸ் தொலைக்காட்சி மறுத்துள்ளது.
ஈரான் அதிபர் அஹ்மதி நிஜாத் மீது கிரனேடு தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் அதிலிருந்து அவர் மயிரிழையில் உயிர்பிழைத்ததாகவும் செய்தி பரவியது. இச்செய்தியை முதன் முதலில் khabaronline.ir என்ற இணைய தளம் வெளியிட்டிருந்தது. அதன் பின்னர் ரியூட்டர்ஸ் செய்தி நிறுவனமும் அல் அரேபியா தொலைக்காட்சி அலைவரிசையும் அச்சம்பவம் ஈரான் அதிபர் மீதான தாக்குதல் தான் என செய்தி வெளியிட்டிருந்தன. இதனை அடிப்படையாகக் கொண்டு நம் இந்நேரம்.காம் செய்திதளமும் இச்செய்தியை வெளியிட்டது.
தற்போது, ஈரான் அரசின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி அலைவரிசையான ப்ரஸ் தொலைக்காட்சி, இச்சம்பவம் அதிபர் மீதான தாக்குதல் அல்ல என மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற போது நிகழ்ந்த அசம்பாவிதம் தான் என்றும் அந்த நிகழ்ச்சியில் அதிபர் நல்லபடியாக கலந்து கொண்டார் என்றும் நிகழ்ச்சியில், "மேற்குலகுக்கு எதிராக அதிபர் பேசியிருந்தாலும் அந்த அசம்பாவிதத்தைக் குறித்து எதுவும் பேசவில்லை" என்றும் ப்ரஸ் தொலைக்காட்சி கூறியது.
நிகழ்ச்சியில் பேசும் போது தான் படுகொலை செய்யப்படுவதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக நம்புவதாக அஹ்மதி நிஜாத் தெரிவித்தார். அதற்காக இஸ்ரேல் நபர்களைத் தயார்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




