18 வயது ஆணும் 16 வயது பெண்ணும் மனமொப்பி திருமணம் செய்து கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காதலித்து திருமணம் செய்த 18 வயது கணவனும் 16 வயது மனைவியும் இணைந்து தாக்கல் செய்த வழக்கில் இந்தத் தீர்ப்பை டெல்லி நீதிமன்றம் வழங்கியது.
பெற்றோர்களின் துன்புறுத்தலால் ஊரைவிட்டு ஓடியவர்களைத் தேடிக் கண்டுபிடித்த பெண்ணின் பெற்றோர் இருவரையும் பிரித்து தங்களுடன் மகளை அழைத்துச் சென்றதோடு கணவன்மீது ஆள் கடத்தல், கற்பழிப்பு வழக்குகளைப் பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர்.
இதை எதிர்த்தும் தங்களுக்கு பாதுகாப்பு கோரியும், தங்கள் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்த இளம்தம்பதிகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்தத் திருமணம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.
நீதிபதி அகமத், நீதிபதி ஜெயின் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வழங்கிய தீர்ப்பில், குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவே திருமண வயது சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதையும் மீறி பெற்றோரே நடத்திவைக்கும் குழந்தைத் திருமணங்கள் நடைமுறையில் உள்ளன.
பெற்றோரின் நெருக்குதல்களால் நடக்கும் பால்ய வயது திருமணங்களை முழுமையாகத் தடுக்க முடியாத நிலையில் 18 வயது ஆணும் 16 வயது பெண்ணும் திருமணம் செய்து கொண்டதை செல்லாது என்று அறிவிக்க முடியாது. அவர்களில் யாராவது ஒருவர் இந்தத் திருமணத்தை எதிர்த்தால் தான் அது செல்லாதே தவிர, அவர்கள் விரும்பி செய்து கொண்ட இந்தத் திருமணம் செல்லும்.
வயதை காரணம் காட்டி யாருடைய திருமணத்தையும் தடுக்க முடியாது. திருமணம் முடிப்பவர்கள் மட்டும்தான் இதில் முடிவெடுக்கலாம். காதல் திருமணத்தால் ஒருவர் கிரிமினல் குற்றவாளியாகி விடக்கூடாது என்று தங்கள் தீர்ப்புரையில் குறிப்பிட்டுள்ளனர்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




