ரியாத் : ப்ளாக் பெர்ரி போன்களை பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்ய போவதாக சவூதி அரசாங்கம் அறிவித்திருந்ததை ஏற்கனவே இந்நேரத்தில் பிரசுரித்திருந்தோம்.
கடந்த வெள்ளிகிழமைக்குள் ப்ளாக் பெர்ரி தன் விதிகளுக்கு கட்டுபட வேண்டும் என்று கொடுத்திருந்த காலக் கெடு முடிவடைந்த நிலையில் பல காரணங்களால் தடை முடிவிலிருந்து சவூதி அரசாங்கம் பின் வாங்குவதாக தெரிகின்றது. கடந்த வெள்ளிகிழமைக்குள் ப்ளாக்பெர்ரி சேவையை நிறுத்தாவிடில் 1.3 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது சவூதி அரசாங்கம் ப்ளாக் பெர்ரி நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் விளைவாக ப்ளாக்பெர்ரி சேவையை அனுமதிப்பாக தெரிவித்துள்ளது.
தற்போது ப்ளாக்பெர்ரியிலிருந்து அனுப்பும் செய்திகளை சவூதி அரசாங்கத்தால் கட்டுபடுத்த முடியுமா என்ற கேள்விக்கு தொழில்நுட்ப விவகாரங்களை வெளியிட முடியாது என்று சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் ப்ளாக்பெர்ரியை தடை செய்ய கூடாது என்று ப்ளாக்பெர்ரி பயன்பாட்டாளர்கள் அரசாங்கத்துக்கு நெருக்குதல் கொடுத்தனர்.
மேலும் அமெரிக்க அரசாங்கத்தின் நெருக்கடியும் வர்த்தக உலகின் நெருக்கடியும் சேர்ந்தே சவூதி அரசாங்கம் இம்முடிவை எடுக்க காரணம் என வணிக வட்டாரங்கள் தெரிவித்தன. அரசாங்கத்தின் இம்முடிவை வரவேற்பதாக ப்ளாக்பெர்ரி பயன்பாட்டளர்கள் தெரிவித்தனர். சவூதி அரேபியாவில் சுமார் 7 இலட்சம் நபர்கள் ப்ளாக்பெர்ரி சேவைக்கு சந்தா செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




