இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

வணங்காமுடி பதில்கள் (16-08-2010)

E-mail அச்செடுக்க

 

 

 

சர்வதேச சந்தையில் குருடாயிலுக்கான விலையை நிணயிப்பது யார்? - ரமேஷ்

அல்ஜீரியா,அங்கோலா,ஈக்வடார்,இரான், இராக், குவைத், லிபியா, நைஜீரியா, கத்தர்,ஸவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகங்கள் மற்றும் வெனிஸுலா ஆகிய நாடுகள் இணைந்த Organization of the Petroleum Exporting Countries—OPEC— எனும் அமைப்பு விலையை முடிவுசெய்கிறது.



விடுதலைப் புலிகளின் தோல்விக்கு காரணமாகத் தாங்கள் கருதுவது? - இர்ஷாத்

அரசியல் தொலைநோக்கின்மையை முதன்மைக் காரணம் எனலாம்.

ரனில்விக்ரமசிங்கேயின் அணுகுமுறையால் நல்ல இணக்கமான சூழ்நிலை உருவாகும் வாய்ப்பு இருந்தும் புலிகள் தேர்தலைப் புறக்கணித்ததால் அதிபர் தேர்தலில் ரனில்விக்ரமசிங்கே தோற்று மகிந்தராஜபக்ஷெ பதவிக்கு வரும் நிலை வந்தது.

மற்ற சில காரணங்கள், புலிகள் தங்கள் ஆயுதங்கள் மீதும் போர்த் திறமையின் மீதும் வைத்திருந்த அதீத நம்பிக்கை,

கருணாவின் விலகலால் புலிகளின் போர்முறைகளும் ஆயுதங்கள் குறித்த விபரங்களும் சிங்கள அரசுப் படைகளுக்குக் கிடைத்தமை

இந்தியாவின் ஆதரவின்மை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.


இந்தியாவுக்கு சர்வாதிகார ஆட்சிதானே சிறந்தது? பின்னே என்ன ஸார் - அதில் ஒரு அயோக்கியனை சமாளித்தால் போதும். நாம ஒவ்வொரு அயோக்கியனையும் அல்லவா சமாளிக்க வேண்டியுள்ளது? - மணி

உங்கள் வினாவில் விரக்தி தொனிக்கிறது. அராஜக அரசியல்வாதிகளின் அட்டகாசங்களால் வெறுத்துப்போய் இப்படி வினவியுள்ளீர்கள்.நீங்களும் உட்படும் இந்திய வாக்காளர்களே அராஜக அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுக் கின்றனர். கட்சி, சாதி, மதம், இனம்,மொழி எனப்பார்த்து வாக்களிப்பதால் நல்ல, பண்பானவர்கள் சட்டமன்றத்திற்கோ நாடாளும் மன்றத்திற்கோ போக முடிவதில்லை. தேர்தல்களில் மக்கள் சாதி,மதம்,இனம் இவற்றை பாராமல், பணம் பெறாமல் வாக்களிக்கத் தொடங்கினால் நல்லவர்கள் நம்மை ஆளும் சூழ்நிலை உருவாகும்.

ஜனநாயகம்தான் இம்மாபெரும் நாட்டை ஒன்றாக ஒருமைப்பாட்டுடன் வைத்திருக்கிறது. சர்வாதிகார நாடுகள் சிதறுண்டதை அல்லது சர்வாதிகாரிகள் விரட்டப்பட்டதைச் சமகால வரலாறு காட்டிக்கொண்டிருக்கிறதே!


தொழில்நுட்ப பட்டயப்படிப்புகள் தமிழில் கற்பது மாணவர்களின் தரத்தைப் பாதிக்காதா? - உஷா

மாணவர்களின் தரம் என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்? புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்குத் தருவதிலா? அப்படியென்றால் ஜப்பானியர்கள் தங்கள் தாய்மொழியில் தான் பொறியியல் பட்டப்படிப்புகளைப் படிக்கிறார்கள். தாய்மொழிக்கல்வி சிந்திக்கும் திறனை எவ்விதத்திலும் குறைக்காது.

ஆனாலும் தங்கள் கேள்வியில் ஒரு நியாயம் உள்ளது. தாய்மொழியில் பயிலும் போதே சில கலைச் சொற்களின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் சேர்த்தே அறிந்து கொண்டால் தாயகம் தவிர பிற இடங்களில் பணிபுரிய ஏதுவாக அமையலாம்.


ஹெட் அண்ட் ஷோல்டர் ஷாம்பூ தயாரிக்கப்பயன்படுத்தப்படும் வேதிப்பொருளால் புற்றுநோய் தாக்க வாய்ப்புள்ளது எனக்கூறி அதனை வளைகுடாவில் தடை செய்துள்ளதாகப் படித்தேன். உண்மையா வணங்காமுடி சார்? - ஜார்ஜ்

ப்ராக்டர் அண்ட் கேம்பிள் எனப்படும் அமெரிக்க நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்பான ஹெட் அண்ட் ஷோல்டர் (கரீனா கபூரும் ஷாஹித் கபூரும் தலைமுடியைச் சிலுப்பிக் கொள்கிறார்களே அதே விளம்பரம் தான்) ஷாம்பூவின் மத்தியகிழக்குத் தயாரிப்பகம் சவூதி அரேபியா நாட்டின் தம்மாம் நகரில் உள்ளது. அங்குத் தயாரிக்கப்படும் இந்த ஷாம்பூவில் பலவகைப் பிரிவுகள் உள்ளன.

(ஷைன், கூல் மென்தால், சாஃப்ட் அண்ட் சில்கி, இன்னபிற) இவற்றுள் கத்தார் அரசின் பயனர் பாதுகாப்பு அமைச்சகம் செய்த ஆய்வில் சாஃப்ட் அண்ட் சில்கி, லைவ்லி இந்த இரு பிரிவுகளின் கீழ் வரும் ஷாம்பூக்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட டைஆக்சேன் என்ற வேதிப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வேதிப்பொருள் நீண்டகாலம் பயன்படுத்திவந்தால் புற்று நோய் உருவாக்கும் காரணிகளில் ஒன்றாக அறியப்பட்டது. இதனாலேயே கத்தார் அரசு இந்த இரு பிரிவுகளுக்கு மட்டும் தடை விதித்தது.

அதற்காக பிற ஷாம்பூக்கள் நல்லவை என்றும் பொருள் கிடையாது. நாம் அரண்டு போகவும் தேவையில்லை. எல்லா ஷாம்பூக்களிலும் இது இருக்கிறது. அளவு தான் வேறுபடுகிறது.

இன்னொரு செய்தியையும் தெரிந்து கொள்ளுங்கள்; ஷாம்பூவாவது நாம் உடலுக்கு வெளியே பயன்படுத்துவது. நம்மில் பலர் அன்றாடம் பருகும் குளிர்பானங்களில் பூச்சிமருந்து கலந்து உள்ளது; அதனையும் நாம் குடித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

 

எக்ஸ்ப்ளோரருக்கு இணையாக ஃபயர்ஃபோக்ஸ் உலவி பிரபலமாகியுள்ளது போல், விண்டோஸ் இயங்குதளத்துக்கு இணையாக லினக்ஸ் இலவச இயங்குதளங்கள் பிரபலமாகாதது ஏன்? - அப்துல் ரஹ்மான்

எக்ஸ்ப்ளோரர் என்று மைக்ரோசாப்டின் இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரைக் (ஐ ஈ) குறிக்கிறீர்கள் என நினைக்கிறேன். (எக்ஸ்ப்ளோரர் என்பது விண்டோஸ் இயங்கு தளத்தில் இருக்கும் இன்னொரு செயலி)

ஐஈ யின் இடத்தைப் பிடிப்பதற்கு ஃபயர் ஃபாக்சிற்கு நீண்ட நாட்கள் ஆகலாம் இன்னும் அறுபது விழுக்காட்டுக்கு மேல் சந்தை இன்னும் ஐஈ-யிடம் தான் உள்ளது. இருப்பினும் ஃபயர்ஃபாக்ஸ் பிரபலம் ஆகிவருவதற்கு அதன் புதிய முனைப்புகளே (innovations) காரணம்.

சரி அது கிடக்கட்டும்; தங்கள் கேள்விக்கு வருவோம். விண்டோஸ் இயங்கு தளத்துக்கு இணையாக லினக்ஸ் இலவச இயங்கு தளங்கள் பிரபலம் ஆகாததற்குக் காரணம், அதன் பராமரிப்பில் இருக்கும் தெளிவின்மையே.

காட்டாக, ரெட்ஹேட் எனப்படும் பிரபலமான லினக்ஸ் இயங்குதளம் பயன்படுத்த இலவசம் தான் ஆனால் அதன் பராமரிப்பு உரிமம் பெறாவிட்டால், அதில் ஏற்படும் எந்தப் பழுதுக்கும் ரெட்ஹேட் பொறுப்பேற்காது.

இது போல எண்ணற்றப் பல இலவச இயங்குதளங்கள் இருந்தாலும், அதனைப் பராமரிக்கத் தெளிவான ஒரு நிறுவனம் இல்லை; பராமரிப்பு வேண்டுமென்றால் அதற்கான உரிமம் பெறவேண்டும். சாமானிய மக்களுக்கு இது சரிப்பட்டு வராததாலேயே விண்டோசின் ஆதிக்கம் இன்னும் நிலவுகிறது.

 

கண்ணால் காண முடியாத காற்று மூலமாகத்தான் ஒலி பரவும் என்கிறார்களே..! அது எப்படி? - அபூ பைசல்

ஒலி பரவ ஓர் ஊடகம் தேவை அவ்வளவே; அது கண்ணால் காண முடிந்ததாகவும் இருக்கலாம்; காண முடியாத காற்றாகவோ வேறொரு வாயுவாகவோ இருக்கலாம்.

ஒலி எப்படிப் பரவுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள அதன் அலை வடிவத்தை அறிந்து கொள்வது நல்லது. ஒலி அலை வடிவில் ஊடகத்தின் மூலக்கூறை அடையும் போது அதை அதிர்வடையச் செய்கிறது. இந்த அதிர்வு அருகருகே இருக்கும் மூலக்கூறுகளால் கடத்தப்பட்டு மறுமுனையை வந்தடைகிறது.

சின்ன வயதில் தண்டவாளத்தில் காது வைத்து எங்கோ வரும் ரயிலின் தடதடப்பைக் கேட்ட அனுபவம் தங்களுக்கு இல்லையா சார்?


கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் இங்கே க்ளிக்கவும்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்