இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

கண்ணீரில் காஷ்மீர்; தீர்வு என்ன?

E-mail அச்செடுக்க

வரைபடத்தில் இந்தியாவின் தலையாக விளங்கும் காஷ்மீர், கடந்த சில மாதங்களாக பல உயிர்களைப் பலி கொடுத்து நிம்மதியிழந்து தவிக்கிறது. ஏப்ரல் மாதத்தில் மச்சில் என்ற இடத்தில் போலி என்கவுண்டரில் மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டதால் நீறுபூத்த நெருப்பாக இருந்த காஷ்மீர், ஜுன் 11 அன்று துபைல் என்ற சிறுவன் ராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டதும் பற்றி எரியத் தொடங்கியது. அன்று வெடித்த போராட்டத்திலிருந்து இன்று வரை ஏறத்தாழ 50 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


கொல்லப்பட்டுள்ளவர்களில் பலர் இளைஞர்கள். இரு யுவதிகள் பாதுகாப்புப்படையினரால் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட போதே தற்போதைய அமைதியின்மைக்குக் காஷ்மீரில் தூபம் போடப்பட்டு விட்டது. காவல்துறையின் பல அடக்குமுறையினையும் மீறி, மக்கள் நடத்திய போராட்டங்களின் விளைவாக நீதிமன்றம் தலையிட்டு அப்பிரச்சனையில் பாதுகாப்புப்படையினர் குற்றமிழைத்ததைக் கண்டறிந்தது. நீண்டகாலமாக காஷ்மீர் முழுவதும் பரவலாக இளைஞர்கள் காணாமல் போகும் சம்பவங்களால் குழப்பத்திலும் விரக்தியிலும் இருந்த மக்கள், இந்த யுவதிகளின் கற்பழிப்புக் கொலைக்குப் பின்னர் பாதுகாப்புப் படையினர் மீதான விரக்தியின் விளிம்பில் இருந்தனர் என்பதைக் கசப்பாக இருந்தாலும் கூறித்தான் ஆக வேண்டும்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த தேர்தலில் மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து இந்திய ஜனநாயகத்தின் மீதான தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தினர். ஆனால் இந்த நம்பிக்கையை சில மாதங்களிலேயே அவநம்பிக்கையாக மாற்றியதில் பாதுகாப்பு படையினருக்கும் ப்ரும் பங்கு இருக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது. தங்களின் பதவி உயர்வுக்காக அப்பாவிகளை எண்கவுண்டரில் சுட்டுக் கொல்வது, பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்வது என்ற ரீதியில் செயல்பட்ட சில காவல்துறை கோடாரிகள், இந்திய அரசின் மீதான காஷ்மீர் மக்களின் நம்பிக்கையைப் பிளந்து போட்டனர்.

"இந்திய காவல்துறையை புறக்கணிக்க வேண்டும்" என அங்குள்ள சில அமைப்புகள் மக்களிடம் அழைப்பு விடும் அளவுக்கு தற்போது நிலைமை மோசமடைந்துள்ளது. சில இடங்களில் பொது மக்கள் காவலர்களிடமிருந்து ஆயுதங்களைப் பறித்து தங்களுடன் போராட அவர்களையும் அழைத்துள்ளனர். காஷ்மீர் முஸ்லிம்கள் அரசு வேலைகளில் இருந்து புறக்கணிக்கப்படுவதும் தற்போதைய போராட்டத்திற்கு மற்றொரு முக்கிய காரணமாகும். அங்குள்ள பள்ளிகள் காவல்துறையினரின் விசாரணைக் கூடங்களாக மாற்றப்படுகின்றன.

ஹுரியத் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "1989 முதல் இன்று வரை 93142 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 107326 குழந்தைகள் அனாதைகளாகியுள்ளதாகவும், 9901 பெண்கள் பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்" தெரிவித்துள்ளது. இதனால்தான் காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் அஹ்மத் ஷா, "இந்திய அரசு காஷ்மீரில் மனித உரிமைகளை மீறிக் கொண்டிருக்கிறது" என்றும் "ராணுவத்தினர் தீவிரவாதிகள் போல் செயல்படுகின்றனர்" எனவும் குற்றம் சாட்டினார். 1990 ஆம் ஆண்டு அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்ணாண்டஸ், "காஷ்மீர் பிரச்னையை அயலவர்கள் யாரும் தூண்டவில்லை. நாம்தான் காரணம் என நினைக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

1991-ல் காஷ்மீருக்குச் சென்று வந்து பத்திரிகையாளர்களிடம் உரையாடிய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, "இந்திய ராணுவமும் மத்திய பாதுகாப்பு காவல்துறையும் (CRPF) தொடர்ந்து மோசமாக மக்களிடம் நடந்து கொண்டால் காஷ்மீரை நாம் இழக்க நேரிடும்" என வருத்தத்துடன் கூறினார்(the weekend guardian,london,4.8.1991).

"காஷ்மீர் பிரச்னையை ராணுவ ரீதியாக தீர்க்க முடியாது" என்றும் "பேச்சுவார்த்தை மூலமாகவே அதனைத் தீர்க்க வேண்டும்" என பல கட்சியினரும் தற்போது கருத்து தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் மீதான அடக்குமுறைகளை முழுமையாக ராணுவம் கைவிட வேண்டும். மீறி மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்களை அரசு பாதுகாக்காமல் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 1990-களில் இந்திய அரசுக்கு எதிராக போராடியது போல் தற்போதைய நிலைமை இல்லை எனவும் தற்போதைய போராட்டம் ராணுவத்தினரின் அடக்கு முறைகளுக்கு எதிராகவே இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

"உயிர்ப்பலி எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும்" என இரண்டு தீவிரவாதிகள் உரையாடிய ஒலிநாடாவை உள்துறை அமைச்சகம் இடைமறித்து கேட்டுள்ளது. எரிகின்ற தீயில் எப்படி எண்ணையை வார்க்கலாம் என இந்தியாவின் எதிரிகள் முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது தீயை உடனடியாக அணைக்கின்ற வேலையைச் செய்யாமல், அதனை வளரவிட்டுக் குளிர் காய்ந்து கொண்டிருப்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கும் பாதுகாப்புக்கும் உகந்ததல்ல.

இந்தியாவின் தலை சரியாக இருந்தால்தான் மற்ற பகுதிகளும் நிம்மதியாக இருக்க முடியும்.  இப்பிரச்சனையை அரசியலாக்காமல் காஷ்மீரிலுள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும். ஒரு காஷ்மீர் முதியவர் "தற்போதையப் போராட்டங்களை அடக்கு முறை மூலம் அடக்க நினைத்தால், அடுத்து வரும் தலைமுறையினர் தங்களின் முந்தைய தலைமுறையினரின் பாதிப்புகளை நினைவு கூறுவார்கள். முந்தைய தலைமுறையினர் ஜனநாயக வழியில் போராடி நிம்மதியாக வாழ முடியவில்லை என நினைத்து ஆயுத ரீதியான போராட்டத்தை மீண்டும் தொடங்குவார்கள்" என கூறுவதை இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

என்னால் நீரறுந்த முடியாது
அதில் எனது இளைஞர்களின் குருதிகள் ஊடுறுவியுள்ளது.

என்னால் ஆகாயத்தைப் பார்க்க முடியாது
அது நீல நிறமற்று சிகப்பால் போர்த்தப்பட்டுள்ளது.

பொங்கி வரும் நீரூற்றின் ஒலியைக் கேட்க முடியாது
குண்டு துளைத்தவனின் உடலருகில் தாயின் கதறலை அது நினைவூட்டுகிறது.

இடியினையும் இனி கேட்க முடியாது
அது வெடியினை எனக்கு நினைவுபடுத்துகிறது.

எனது தோட்டத்தின் பச்சைகளும் காய்ந்துவிட்டன
அதுவும் இரங்கல் தெரிவிக்கிறது.

குயில்களும் கூவுவதை நிறுத்தி விட்டன
அவைகளும் வருத்தத்திலுள்ளன!

- ஒரு காஷ்மீர கவிதை.


எங்கு நீதி மறுக்கப்படுகிறதோ அங்குதான் தீவிரவாதம் தலை தூக்குகிறது. தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் எனில் நோய் நாடி நோய் முதல் நாடி என்பதற்கேற்ப, பாரபட்சமில்லாமல் நீதி அனைவருக்கும் கிடைக்க அரசு ஆவன செய்தல் வேண்டும். அநியாயம் இழைப்போர், அது பாதுகாப்புப்படையினராக இருந்தாலும் சரி இராணுவமாக இருந்தாலும் சரி, அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே பிரச்சனைக்கான முழுமையாகத் தீர்வாக அமையும்.

கருத்துக்கள் (4)Add Comment
0
...
எழுதியவர்: மனிதன், August 19, 2010
தயவு செய்து உங்கள் தளத்தில் இனி தலையங்கம் என்ற பெயரில் எதையும் பதியாதீர்கள் அப்படி பதிய ஆசைபட்டால் "மக்கள் தலையில் விழுந்த மத்திய அரசின் இடி" போன்றவற்றோடு நிருத்திக்கொள்ளுங்கள்.

///////"உயிர்ப்பலி எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும்" என இரண்டு தீவிரவாதிகள் உரையாடிய ஒலிநாடாவை உள்துறை அமைச்சகம் இடைமறித்து கேட்டுள்ளது. எரிகின்ற தீயில் எப்படி எண்ணையை வார்க்கலாம் என இந்தியாவின் எதிரிகள் முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது தீயை உடனடியாக அணைக்கின்ற வேலையைச் செய்யாமல், அதனை வளரவிட்டுக் குளிர் காய்ந்து கொண்டிருப்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கும் பாதுகாப்புக்கும் உகந்ததல்ல.

இந்தியாவின் தலை சரியாக இருந்தால்தான் மற்ற பகுதிகளும் நிம்மதியாக இருக்க முடியும். இப்பிரச்சனையை அரசியலாக்காமல் காஷ்மீரிலுள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும்.///////

கஷ்மீர் சுதந்திரத்தை கேவலப்படுத்தாதீர்கள்.
0
...
எழுதியவர்: சிவப்புக் கொடி, August 21, 2010
ஐயா..... இந்த தலையங்கத்தை எழுதிய தோழா கஷ்மீரிகளின் போராட்டத்தை அவமானபடுத்தாதே. தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரிக்கைகளும் தான் கஷ்மீர் பிரச்சனையை மூடி மறைக்கிறார்கள் என்றால் இனையதளத்திலுமா?

உங்களுக்கு எல்லாம் மனசாட்ச்சியே இல்லையே அல்லது கஷ்மீரை பற்றி எதுவும் தெரியாதா ஏன் இந்த மாதிரி எழுதுறீங்க யாரை திருப்திபடுத்த நினைக்கிறீங்க.

உங்கள் தளத்தை பற்றி என் சக நண்பர்களிடம் மிக பெருமையாக சொல்லிவந்தேன் ஆனா உங்களுடைய இந்த தலையங்கத்த படிச்ச பின்னே மன வேதனையா இருக்கு சார்.
0
...
எழுதியவர்: ராமா, August 21, 2010
தோழர் "மனிதன்" மற்றும் "நடுநிலையாளன்" ஆகிய இருவரும் சரியா சொன்னீங்க.

எல்லா பத்திரிக்கைகளுமே பார்பனனை திருப்திபடுத்த வேண்டும் என்று தான் நினைக்கிறாங்க.
0
...
எழுதியவர்: சாமி, December 14, 2010
யாரையும் திருப்தி படுத்தமுடியாது உண்மை அப்படி !

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்