ரூ14,000 கோடி கையாடல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த முன்னாள் 'சத்யம்' நிறுவன அதிபர் ராமலிங்க ராஜுவை ஆந்திரப் பிரதேச உயர்நீதி மன்றம் பிணையில் விடுவித்திருக்கிறது. இந்தியாவின் ஆகப்பெரிய கார்ப்பரேட் ஊழலின் காரணகர்த்தா என கருதப்படும் ராமலிங்க ராஜு கடந்த ஆண்டு ஜனவரியில் கைது செய்யப்பட்டார்.
ராமலிங்க ராஜு கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து ஹைதராபாத் நிஜாம் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருக்கிறார். அவர் ஹைதராபாத்திலேயே தங்கியிருக்க வேண்டும் எனவும் மருத்துவமனையிலிருந்து வெளியானதும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
சத்யம் நிறுவன ஊழல் வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும் சிபிஐ தரப்பு, ராமலிங்க ராஜு பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. அவர் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி விசாரணையைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருப்பதால் ஒரு சிறப்பு மருத்துவர் குழு அவரை பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் சிபிஐ விண்ணப்பித்திருக்கிறது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




