புதுடில்லி: இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட எம்.பி.க்களின் சம்பள உயர்வு மசோதாவில் உள்ள ரூ.50,000 போதாது அதை ரூ.80,000 ஆக உயர்த்தக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் இன்று இருமுறை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள ஏக்கம் இன்று முடிவுக்கு வந்தாலும், இது போதாது என ரூ. 80 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும் என எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். லோக்சபாவில் மக்கள் பிரதிநிதிகள் தங்களுடைய சம்பளம் உயர்வு கேட்டு கோஷம் எழுப்பியது பார்லி., நடவடிக்கையை பார்க்க வந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது
முன்பு நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம்தோறும் ரூ.16 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் எம்.பி.,க்களை விட, அரசு செயலர்கள், கூடுதல் சம்பளம் வாங்குவதாகவும், இந்த சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் எம்.பி.,க்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ரூ.80 ஆயிரம் வரை உயர்த்தலாமா என பரிசீலிக்கப்பட்டது.
இதற்கு நாட்டின் பொருளாதார நிலையை எடுத்துக்காட்டி ஒரு சில அமைச்சர்கள் இவ்வளவு சம்பளம் தேவையில்லை என எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் சம்பளம் உயர்த்தி வழங்கிட அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது. இந்த சரத்துக்கள் கொண்ட மசோதா இன்று பார்லி.,யில் தாக்கல் செய்யப்படும். இதன்படி எம்.பி.,க்களுக்கு ரூ.16 ஆயிரமாக இருந்த சம்பளம் 50 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
நாள்தோறும் உள்ள படி ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரமாகவும், தொகுதி நிதி ரூ.20 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும் என் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எம்.பி.,க்கள் சம்பளம் 300 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிட்த்தக்கது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




