இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

லெபனான் வான்பரப்பில் இஸ்ரேலியப் போர் விமானங்கள்

E-mail அச்செடுக்க

இஸ்ரேலியப் போர் விமானங்கள் லெபனான் வான்பரப்பில் பலமுறை அத்துமீறிப் பிரவேசித்துள்ளன. இந்தப் போர்விமானங்கள் லெபனானின் தென்பகுதி வான்பரப்பினூடே சட்டவிரோதமாக உள்நுழைந்து உளவறியுமுகமாக மிகத் தாழ்வாகச் சஞ்சரிப்பது இது முதல் தடவையல்ல என்று லெபனான் இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கு முன்பு கடந்த புதன்கிழமை 8 இஸ்ரேலிய உளவு விமானங்களும் இரண்டு போர் விமானங்களும் தென் லெபனானிய நகரான பால்பெக் பிரதேச வான்பரப்பில் சட்டவிரோதமாகச் சஞ்சரித்துள்ளன. அவ்வாறே, வியாழக்கிழமை (19.08.2010) மு.ப. 7.15 மணியளவிலும் (0415 GMT) இரண்டு போர்விமானங்கள் அத்துமீறிப் பிரவேசித்துள்ளன.

2006 இல் முடிவடைந்த இஸ்ரேல்- லெபனான் யுத்தத்தைத் தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்புக் கவுன்ஸிலில் நிறைவேற்றப்பட்ட 1701 ஆம் தீர்மானத்தை முற்றாகப் புறக்கணித்து இஸ்ரேலிய வேவு விமானங்கள் தமது நாட்டு வான்பரப்பில் அடிக்கடி சட்டவிரோதமாக உட்பிரவேசித்த போதிலும், தாம் அவற்றின்மீது எதிர் தாக்குதல் தொடுக்கவில்லை என்று லெபனான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இரண்டு நாடுகளுக்குமிடையிலான உடன்படிக்கையின் ஷரத்துக்களை மீறி இஸ்ரேல் செயற்படுவதை உரிய ஆதாரங்களோடு ஐ.நா.விடம் லெபனான் அரசாங்கம் சமர்ப்பித்துள்ள போதிலும், இதுவரை சுமார் 7,000 தடவைகள் லெபனானின் வான்பரப்பு, கடற்பரப்பு எல்லைகளில் இஸ்ரேல் சட்டவிரோதமாக ஊடுருவி வந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், லெபனான், சிரியா நாட்டு எல்லைகளை ஒத்த காடடர்ந்த பிராந்தியங்கள் செயற்கையாக வடிவமைக்கப்பட்டு இஸ்ரேலிய-அமெரிக்க இராணுவப் படையணிகள் ஒன்றிணைந்து போர்ப் பயிற்சியெடுத்து வருகின்றன. இந்தப் போர்ப் பயிற்சிகள் முழுக்க முழுக்க கொரில்லாப் போர்முறையை முறியடிக்கும் விதத்தில் படையணிகளுக்குப் பயிற்சியளிப்பதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, லெபனான் மீது இஸ்ரேல் போர்தொடுக்கும் பட்சத்தில் இஸ்ரேலுக்கு எதிராகத் தமது நாடும் களத்தில் இறங்கத் தயார் என்று ஈரானிய அதிபர் அஹ்மத் நிஜாத் பரபரப்புப் பேட்டியளித்துள்ளார். இவ்வாறாக, வளைகுடாவை நோக்கிப் போர் மேகங்கள் சூழ்ந்து வரும் அறிகுறிகள் குறித்து அரசியல் அவதானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்