கடந்த ஞாயிற்றுக்கிழமை (22.08.2010) இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சர் எஹூட் பராக், இஸ்ரேலின் புதிய உயர் இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் யோவ் காலண்ட்டை நியமிப்பதாக அறிவித்துள்ளமை சர்வதேச அளவில் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் காஸா மீதான அத்துமீறல் ஆக்கிரமிப்பு யுத்தத்தைத் தலைமை தாங்கி நடாத்தியவர் என்பதும் சர்வதேசப் போர்க் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நியமனம் குறித்து இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ வெளியிட்ட அறிக்கையில், இந்த நியமனம் மிகச் சரியானதொரு முன்னெடுப்பாகும் என்றும், இதன் மூலம் பதவி வழங்குவது தொடர்பில் இராணுவத்தின் சிரேஷ்ட படிநிலை மிகச் சரியாகக் கருத்திற் கொள்ளப்பட்டுள்ளது என்றும் கருத்துரைத்துள்ளார்.
வர்த்தகம் மற்றும் நிதிமுகாமைத்துவத்தில் தன்னுடைய பட்டப்படிப்பை நிறைவுசெய்த காலண்ட், 1990 களில் இஸ்ரேலியக் கடற்படையில் இணைந்தார். இவர், முன்னாள் இஸ்ரேலியப் பிரதமர் ஏரியல் ஷரோனின்கீழ் பணியாற்றி, பலஸ்தீனர்களுக்கெதிரான பல்வேறு தாக்குதல்களை முன்னெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2008-2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவரது தலைமையில் இடம்பெற்ற காஸா மீதான அத்துமீறிய இராணுவத் தாக்குதலில் சுமார் 1,400 பலஸ்தீனர்களும் 13 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டதோடு, ஏராளமானவர்கள படுகாயமடைந்தனர். இந்த யுத்தத்தில் சர்வதேச ரீதியாகத் தடைசெய்யப்பட்ட வெண் பொஸ்பரஸ் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றதையடுத்து, சர்வதேச ரீதியாகக் கடுமையான கண்டனங்களை இஸ்ரேல் எதிரிகொள்ள நேர்ந்தது என்பது யாவரும் அறிந்ததே.
இஸ்ரேலின் தெற்குப் படையணியின் கமாண்டராகப் பணியாற்றிவந்த இவர், தற்போது இஸ்ரேலின் உயர் இராணுவத் தளபதியாக நியமனம் பெற்றுள்ளார். இந்நிலையில், இவரது பதவி நியமனத்தின் பின்னால் மிகப் பெரும் குளறுபடிகள் இருப்பதாகக் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. எது எப்படியாயினும், ஈரானின் அணுச்சக்தி வளத்தை எதிர்கொள்வதற்கேற்ற முன்னாயத்தங்களை மேற்கொள்வது எப்படி என்பதே புதிய உயர் இராணுவ தளபதியின் முன்னால் உள்ள மிகப்பெரும் சவாலாகும் என இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




