இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

வணங்காமுடி பதில்கள் (23-08-2010)

E-mail அச்செடுக்க

 

 

 

பத்திரிக்கையாளர் சவுக்கு கைது செய்யப்பட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? - ராஜன்

சவுக்கு, பத்திரிகையாளர் ஆவதற்கு முன் அரசு ஊழியர். அவர் மீது அப்போதே ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறைத் தலைவருடன் அமைச்சர் பூங்கோதை பேசிய ஒலிப்பதிவு குறுந்தகடு வெளியானது தொடர்பான வழக்கு இருந்தது.இப்போது கைது செய்யப்பட்டிருப்பது பற்றிப் பலவிதமான கருத்துகள் (அரசு பழிவாங்குவதாக )சொல்லப்படுகின்றன. உடனடியாக நாம் எந்த முடிவுக்கும் வரமுடியாது.



மந்திரி பதவியே போன போதும் விடாப்பிடியாக தன் தோழியை திருமணம் செய்யும் சசி தரூர் துணிச்சல் குறிந்து வணங்காமுடியின் கருத்து என்னவாம்? - அருண், நெல்லிக்குப்பம்

சசிதரூர் அமைச்சர் பதவியிலிருந்து விலகியதற்கு சுனந்தா புஷ்கரை மணம்புரிவது காரணமில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

இதில் துணிச்சல் என்று வியப்பதற்கு ஏதுமில்லை.

ஓர் ஆண் தன் மனதிற்குப் பிடித்த பெண்ணை மணம்புரிவதை எந்தச் சட்டமும் தடை செய்ய முடியாது. சசி சுனந்தாவை மணம் புரியத் தடையாக இருந்த அவரது முந்தைய மணம் முடிவுக்கு வந்த பின், இந்துத் திருமணச்சட்டம் (1956) கூட இதற்கு எதிராக நிற்க முடியாது

இருவருக்குமே இது மூன்றாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆயுதம் ஒப்படைக்கும் மாவோயிஸ்டுகளுக்கு லட்ச ரூபாய் பரிசு, வங்க அரசு அறிவித்ததாக செய்தியில் படித்தேன். ஒரு துப்பாக்கி, ஒரு வாள் ஒப்படைத்தாலுமா? இது ஏமாற்று தானே? - ராதா, கிருஷ்ணகிரி

பணம் கொடுப்பது ஆயுதத்துக்கு இல்லை. ஆயுதம் ஒப்படைப்பவனின் மறுவாழ்வுக்கு உதவியாகவே!அவன் வன்முறையைக் கைவிட்டுவிட்டு இயல்பு வாழ்வுக்குத் திரும்ப அரசு கொடுக்கும் நல்லெண்ணப் பரிசு. அவ்வளவே!


மறைந்த கார்டுவெல் போப், "தமிழுக்குத் தொண்டு செய்ததைவிட இந்துக்களை கிருஸ்த்துவர்களாக்கி மிஷனரிக்குத் தொண்டு செய்ததே அதிகம்" என்று சொல்லப் படுவது உண்மையா? - செல்வநாயகம்

உங்கள் வினாவில் உண்மை இல்லாமலில்லை.

கால்டுவெல் தமிழ்த் தொண்டுக்காக இந்தியாவுக்கு வரவில்லை; கிருத்துவ சமயத்தைப் பரப்புவதற்காகவே வந்தார். அவர் வந்த நோக்கத்தில் குறை வைக்கவில்லை. கூடவே தமிழ்த் தொண்டும் செய்தார்.

வெளிநாட்டவர் எது செய்தாலும் நாம் சற்று அதிகப்படியாகவே புகழ்ந்து விடுவோம். கால்டுவெல் தமிழ்த் தொண்டராகப் புகழப்படுவதும் இந்த ரகமே!


தசாவதாரம், எந்திரன் என இப்பொழுதெல்லாம் திரை இசைப்பாடல் வெளியீட்டிற்கும் கோடிகளில் செலவிடப்படுகிறதே! மறைமுகமாய் ரசிகனின் தலையில் வந்து விழும் இந்த செலவினங்கள் அநியாயமில்லையா? - குமரன், ஈரோடு

பரபரப்பான விளம்பரங்களை முதலீடாகக் கொண்டு வணிகம் செய்யும் போக்கு இன்று உலகெங்கும் உள்ள நடைமுறையே! விளம்பரங்களுக்கு எவ்வளவு செலவு செய்கிறார்களோ அவ்வளவு விற்பனை நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் தவறில்லையே!

ஒரு புதுப்படம் வெளியிடப்படும்போது முதல் ஓரிரு வாரங்களுக்குத் திரையரங்குகளே கட்டணத்தைத் தீர்மானித்துக் கொள்ளலாம் என அரசு அனுமதித்துள்ளது. கமல், ரஜினி போன்ற உச்ச நட்சத்திரங்கள் நடித்த படன்களுக்கு ரசிகர்கள் கட்டணத்தைப் பொருட்படுத்துவதில்லை.

ரசிகன் தலையில் வந்து விழும் இந்தச் செலவினங்கள் அநியாயமில்லையா என ஆதங்கப்படுவதற்கு இவை என்ன மனிதனுக்கு அடிப்படைத் தேவைகளா?

திரைப்பட அனுமதிச் சீட்டுக் கட்டணத்தை விடப் பலமடங்கு செலவில் கட் அவுட்டும் அதற்குப் பாலாபிஷேகமும் செய்யும் ரசிகன் இதையெல்லாம் பொருட்படுத்த மாட்டான்.


 

தலைநகருக்கு வேலை தேடி வந்த இளம் பெண் வஞ்சிக்கப்பட்டு, கேட்பார் நாதியின்றிச் சாலையோரமாக பிரசவித்து பரிதாபமாக இறந்து போனது பற்றி? மனிதம் செத்து விட்டதா? - ஜாஃபர் சாதிக், தக்கலை

வினா தெளிவாகவில்லை!

வஞ்சிக்கப்பட்ட பெண் பிரசவித்தாளா அல்லது இரண்டும் இரு வேறு நிகழ்வுகளா?

எந்தத் தலைநகர்? டெல்லியா சென்னையா?

புரியவில்லை.

வேலைதேடி வந்த பெண் வஞ்சிக்கப்படுவது தலைநகரில் மட்டும்தானா?

சாலையோரமாகப் பிரசவித்துப் பரிதாபமாக இறந்துபோனதால் மனிதம் செத்துவிட்டதா என்றால் அரசு மருத்துவமனைகளில் மட்டும் மனிதம் வாழ்கிறதா என்ன?


 

திடீரென தமிழக முதல்வர் மது விலக்கு பற்றி பேசுவது ஏன்? - அருணாசலம், தென்காசி

மதுவையோ குடியையோ அறியாதிருந்த ஒரு தலைமுறையின் தலையெழுத்தை மாற்றியதே கருணாநிதிதான். தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியிலும் அண்ணாதுரையின் தி.மு.க ஆட்சியிலும் மதுவிலக்கு இருந்தது. கருணாநிதிதான் மதுக்கடைகளைத் திறந்தார்.

இப்போது தேர்தல் நெருங்குவதால் கருணாநிதி மீண்டும் மதுவிலக்குப் பற்றிப் பேசுகிறார்.

போராடும் டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டவே இவ்வாறு கருணாநிதி கூறுவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.

 

அதனால் நகர முயாது என்ற ஒரே காரணத்திற்க்காக சீல் விலங்கை மனிதன் அடித்தே கொள்வதை பார்த்திருக்கிறீர்களா? - எஸ். கார்த்தி

இல்லை! நாம் இருக்கும் இடத்தில் அந்தச் சூழல் இல்லை.

 

காவல்துறையில் வழக்குப்பதிவு செய்ய அடிப்படை தகுதி என்ன? புகாரை ஏற்க மறுத்தால் என்ன செய்ய வேண்டும்? செலவு உண்டா? - ஏ.கெ.டயரி

காவல் நிலையத்தில் புகார் செய்ய , பிறரால் பாதிக்கப்பட்டிருப்பதே தகுதி.

நாம் புகார் கொடுத்ததற்கு காவல் நிலைய எழுத்தர் 'ரசீது' தரவேண்டும். அரசு செலவில் முதல் தகவல் அறிக்கையின் நகலும் தரவேண்டும். புகாரைப் பெற மறுத்தால் உயர் அதிகாரியிடம் புகார்தரலாம். பதிவுத் தபாலிலோ அல்லது தந்தியிலோகூடத் தரலாம்.


 

உமாசங்கரை அரசு பழிவாங்குவது ஏன்? ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஜால்ரா போட்டு தான் பிழைப்பு நடத்த வேண்டுமா? - குமார், வேளச்சேரி

இந்தக் குற்றச்சாட்டுக்கு அரசு இதுவரை தெளிவான விளக்கம் தராததால், குற்றச்சாட்டு உண்மையோ எனத் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஐ ஏ எஸ் அதிகாரிகள் என்று இல்லை; மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் -- தம்மிடம் எந்தக் குறையும் இல்லாமல் பணிபுரியும் எந்த அரசு அதிகாரியானாலும் ஆளும்கட்சிக்கு ஜால்ரா அடிக்கத் தேவையில்லை.


கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் இங்கே க்ளிக்கவும்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்