இஸ்ரேல்-பலஸ்தீன் பிரச்சினையில் ஐரிஷ் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து இஸ்ரேலிய வெளிநாட்டு அமைச்சகம் கடுமையாக விமர்சித்துள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான இந்தப் பிரச்சினையில் ஐரிஷ் அரசாங்கம் கொண்டுள்ள அரசியல் நிலைப்பாடு பலஸ்தீன் சார்பானது மட்டுமல்லாது பாரபட்சமானதும்கூட என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் கருத்துரைத்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை (23.08.2010) மேற்படி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரித்தானிய காலனித்துவத்திற்கு எதிராக ஐரிஷ் மேற்கொண்ட போராட்டத்தோடு பலஸ்தீனர்களின் போராட்டம் ஒப்புநோக்கப்பட்டுள்ளதோடு, 'தீய பாசறை'யைச் சேர்ந்த நாடுகளுள் ஒன்றாக இஸ்ரேல் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கடும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி அறிக்கையில், இஸ்ரேல் மீது மிக்கடுமையான போக்கைக் கடைப்பிடித்து வருவதாக ஐரிஷ் அரசாங்கம் மீது இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் லிபர்மேன் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஐரிஷ் தலைநகர் டுப்ளினில் உள்ள இஸ்ரேலியத் தூதுவர் தமது பணிகளை மேற்கொள்வதில் மிகுந்த இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு வருகிறார் என ஐரிஷின் 'இண்டிபெண்டண்ட்' நாளேடு செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




