புதுடெல்லி: கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் தனி நாடு கேட்டு போராடிய சீக்கிய தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தினரால் அடக்கப்பட்டனர். தற்போது இவர்கள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்க துணையுடன் சீக்கிய தீவிரவாதத்துக்கு புத்துயிர் கொடுக்க முயற்சிகள் நடப்பதாக உளவுத்துறை இயக்குநர் எச்சரித்துள்ளார்.
கடந்த 1980 ஆம் ஆண்டில் பஞ்சாபில் தலைவிரித்தாடிய தனிநாடு கோரிக்கை சீக்கிய தீவிரவாதத்தை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இரும்புக்கரம் கொண்டு அடக்கினார். பொற் கோயிலுக்குள் ராணுவத்தை துணிந்து அனுப்பி தீவிரவாதிகளின் தலைவர் பிந்தரன் வாலேவை சுட்டுக் கொன்றார். அத்துடன் பிந்தரன்வாலேவுக்கும் சீக்கிய தீவிரவாதத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு டெல்லியில் தியேட்டர் ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டது. இதன் பின்னணியில் தடை செய்யப்பட்ட சீக்கிய தீவிரவாத அமைப்பான பாபர் கல்சா இருப்பது தெரியவந்தது. கனடாவில் குடியேறிய சீக்கியர்களில் உள்ள சில தேச விரோத சக்திகள் இந்தியாவில் மீண்டும் சீக்கிய தீவிரவாதத்தை வளர்க்க முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியானது.
பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா துணையுடன் சீக்கிய தீவிரவாதத்துக்கு உயிர் கொடுக்க சர்வதேச தீவிரவாத அமைப்புகள் முயற்சித்து வருவதாக மத்திய உளவுத்துறை இயக்குநர் ராஜீவ் மாத்தூர் எச்சரித்துள்ளார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




