ஹைதராபாத்: குடியுரிமை பற்றி எழுந்த சர்ச்சையால் மறுக்கப்பட்ட டாக்டர் பட்டத்தை சிறப்பு பட்டமளிப்பு விழாவில் வைத்து உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்துக்கு வழங்க ஹைதராபாத் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்துக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஹைதராபாத் பல்கலைக்கழகம் முடிவு செய்தது. கடந்த 23ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற கணித மாநாட்டில் இந்த பட்டத்தை வழங்க திட்டமிட்டிருந்தது. இதற்காக கடந்த ஆண்டே மத்திய மனித வள அமைச்சகத்தின் ஒப்புதலை கேட்டு கடிதம் எழுதியிருந்தது. ஆனால் பத்து மாதங்களாக இந்த கோப்பினை கிடப்பில் போட்ட மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் கடைசி நேரத்தில் ஆனந்த் இந்தியரா? என்ற கேள்வியை எழுப்பினர். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பியது.
பட்டமளிப்பு விழா நடைபெறுவதாக இருந்த 23ம் தேதிக்குள் ஒப்புதல் கிடைக்காத காரணத்தால் ஆனந்த்துக்கு டாக்டர் பட்டமும் வழங்கப்படவில்லை. சர்ச்சையை ஏற்படுத்திய டாக்டர் பட்டமே தேவையில்லை என்றார். இதற்கிடையில் நடந்த தவறுகளுக்காக மத்திய மனிதவள அமைச்சர் கபில்சிபல் மற்றும் இணை அமைச்சர் புரந்தேஸ்வரி ஆகியோர் ஆனந்த்திடம் வருத்தம் தெரிவித்தனர். இதை ஆனந்த் ஏற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து டாக்டர் பட்டத்தையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். இதையடுத்து சிறப்பு பட்டமளிப்பு விழாவில் விஸ்வநாதன் ஆனந்த்துக்கு டாக்டர் பட்டம் வழங்க ஹைதராபாத் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. ஆனந்த் ஒப்புக் கொள்ளும் தேதியில் பிரபலங்களை வரவழைத்து மிகச் சிறப்பாக விழாவினை நடத்தவிருப்பதாக பல்கலைக்கழக துணைவேந்தர் சையத் ஹுசைனைன் தெரிவித்துள்ளார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




