காவி பயங்கரவாதம் என்று கூறி இந்துத்துவா அமைப்புகளின் கண்டனத்தைச் சந்தித்து வரும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் கருத்தில் இருந்து தங்களுடைய கட்சியை வேறுபடுத்திக் காட்டும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. தீவிரவாதத்திற்கு ஒரே ஒரு வண்ணம்தான். அது கருப்பு வண்ணம் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.டெல்லியில் மாநில காவல்துறை அதிகாரிகள் மாநாட்டைத் தொடங்கிவைத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், காவி பயங்கரவாதம் வளர்ந்து வருவதாக குறிப்பிட்டிருந்தார். காவி பயங்கரவாதம் என்ற வார்த்தைப் பிரயோகத்திற்கு பாரதீய ஜனதா கட்சி மற்றும் சிவசேனா உள்ளிட்ட இந்துத்துவா கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜனார்தன் திரிவேதியிடம் செய்தியாளர் கேட்டபோது, "காவியைப் பொறுத்தவரை அது பிரச்சனை இல்லை. தீவிரவாதம்தான் பிரச்சனை. தீவிரவாதத்திற்கு ஒரே ஒரு வண்ணம்தான் உள்ளது. அது கருப்பு" என்று கூறினார்.
காவி பயங்கரவாதம் என்று கூறுவது காங்கிரஸ் கட்சிக்கு எதிர்விளைவையே தரும். இத்தகைய சொற்களைப் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று திரிவேதி கூறினார்.
தீவிரவாதம் எது எப்படி இருந்தாலும் தீவிரவாதம்தான். அதை நாம் எதிர்க்க வேண்டும். காவி நிறம் நம்முடைய பழங்கால நாகரீகத்தின் ஒரு பகுதி. நம்முடைய சுதந்திரப் போராட்டத்திலும் இந்த வண்ணத்திற்கு தொடர்பு உள்ளது. இந்த வண்ணத்தை குறிப்பிட்ட எவரும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும் அவர் கூறினார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (1)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




