இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

சிறுவர் சிறையில் இருந்து 18 சிறார் தப்பி ஓட்டம்!

E-mail அச்செடுக்க
சென்னை சிறுவர்கள் சிறையில் இருந்து 18 இளம் குற்றவாளிகள் தப்பி ஓடினார்கள். ஜன்னல் கம்பியை வளைத்து முதல் மாடியில் இருந்து குதித்து தப்பி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னை புரசைவாக்கம் கெல்லீஸ் பகுதியில் 18 வயதுக்குட்பட்ட இளம் குற்றவாளிகளை அடைக்கும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி எனப்படும் சிறுவர்கள் சிறை உள்ளது.

இங்கு அடைக்கப்படும் குற்றவாளிகளுக்கு பள்ளிக்கூடம், தொழிற்கூடம், விளையாட்டு கூடம் உள்பட பல்வேறு சீர்திருத்த மையங்கள் உள்ளன. இளம் குற்றவாளிகள் தங்களை ஒரு குற்றவாளி என்று எண்ணக்கூடாது என்பதற்காக, அரசு இங்கு பாதுகாப்பு பணியில் போலீசாரை நியமிப்பதில்லை. காவலாளிகளே இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

கெல்லீஸ் சிறுவர்கள் சிறையில் 200 சிறுமிகளும், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 25 பேரும், 16 வயதிலிருந்து 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 35 பேரும் தனித்தனி செல்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். மொத்தம் 260 பேர் அடைக்கப்பட்டு இருந்தார்கள்.

16 வயதிலிருந்து 18 வயதுக்குட்பட்ட இளம் குற்றவாளிகள் அங்குள்ள கட்டிடத்தின் முதல் மாடியில் அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று முன்தினம் இரவு இங்கு தங்கவேலு, ஏழுமலை, அன்பழகன் ஆகிய 3 காவலாளிகள் பாதுகாப்பு பணியில் இருந்தனர். தங்கவேலு முதல் மாடி பாதுகாப்பு பணியில் இருந்தார்.

நள்ளிரவு 11.30 மணி அளவில் காவலாளி தங்கவேலு கழிவறை சென்று திரும்பி வந்து பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜன்னல் கம்பியை வளைத்து, அதன் வழியாக சன்ஷேடில் குதித்து, பின்னர் அங்கிருந்து கீழே குதித்து, அதன் பின் 5 அடி உயர மதில் சுவரை தாண்டி குதித்து 18 இளம் குற்றவாளிகள் தப்பி ஓடி இருப்பதை அறிந்தார்.

இது குறித்து உடனடியாக காவலாளி தங்கவேலு, போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக துணை ஆணையர் லட்சுமி, உதவி ஆணையர் சங்கரலிங்கம், செக்கரெட்டேரியேட் காலனி காவல்துறை ஆய்வாளர் கமீல்பாட்சா ஆகியோர் காவல் படையுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். தப்பிச் சென்றவர்களின் பட்டியலை சேகரித்து அவர்களை பிடிக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் இறங்கினார்கள்.

தப்பி ஓடிய இளம் குற்றவாளிகளின் பெயர் பட்டியல் விவரம் வருமாறு:-

முருகன்-எர்ணாவூர், காளிமுத்து-கூடுவாஞ்சேரி, சீனிவாசன்-அரக்கோணம், சம்பத்குமார்-ஆயிரம்விளக்கு, சேகர்-ஆயிரம்விளக்கு, கதிர்வேலு-கொருக்கு பேட்டை, கிஷோர்பாபு-கொளத்தூர், மணிகண்டன்- வில்லிவாக்கம், இம்மானுவேல்-வில்லிவாக்கம், சுரேஷ்-சேலம், ஜார்ஜ்புஷ்-ராஜமங்கலம், சரவணன்-திருவொற்றிïர், தமிழரசு-மேடவாக்கம், விக்னேஷ்-செம்மஞ்சேரி, அரி என்ற செல்வசோலை-திருப்போரூர், ராஜேஷ்-அரக்கோணம், பிரதீப்-திருநின்றவூர், நாகராஜ்-வண்டலூர்.

இவர்களில் முருகன் மட்டும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர். மற்றவர்கள் அனைவரும் திருட்டு வழக்கில் கைதானவர்கள் ஆவார்கள். இவர்களை பிடிக்க சிறப்பு போலீஸ் படையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறுவர்கள் சிறையில் குற்றவாளிகள் தப்பிச் செல்வது இது ஒன்றும் புதிது இல்லை. ஏற்கனவே ஒரே நேரத்தில் 12 பேர் தப்பி சென்று இருக்கிறார்கள். கடந்த மாதம் கூட 3 பேர் தப்பி சென்றனர். இவ்வாறு தப்பி செல்வதற்கு பாதுகாப்பு குறைவே காரணம் என்று கூறப்படுகிறது. மதில் சுவர் உயரத்தை கூட்டி கட்ட வேண்டும். காவலாளிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் அல்லது போலீசாரை கூட இங்கு காவல் பணியில் ஈடுபடுத்தலாம். ஜன்னல்கள் நீண்ட காலத்துக்கு முன்பு அமைக்கப்பட்டு துருப்பிடித்த நிலையில் உள்ளது. அவற்றை எல்லாம் புதுப்பிக்க வேண்டும்.

ஞாயிற்றுக் கிழமையன்று காவல் பணியில் இருந்த 3 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது. காவலாளிகள் 3 பேரும் படுத்து தூங்கி இருக்க வேண்டும், அல்லது ஒரு இடத்தில் அமர்ந்து சீட்டாடி இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் மீது இலாகாபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்