கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ந் தேதி கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில், அதிமுக பொதுச்செயலாளரும், அப்போதைய முதல்வரும் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்து கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து பல இடங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அந்த சமயத்தில் தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக பேருந்து, தர்மபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டியில் தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் கோகிலவாணி, காயத்திரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இதுதொடர்பாக அ.தி.மு.க.வினர் 31 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சேலம் முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி கிருஷ்ணராஜா விசாரித்தார். வழக்கு விசாரணையின் போது தர்மபுரி மாவட்ட கலெக்டர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் உள்பட 123 பேர் சாட்சியம் அளித்தனர்.
இந்த வழக்கில், தர்மபுரி நகர அ.தி.மு.க. செயலாளர் நெடு என்ற நெடுஞ்செழியன், முன்னாள் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மாது என்ற ரவீந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முனியப்பன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும் தலா ரூ.59 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேலும் 25 பேருக்கு பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் தனித்தனியாக சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி அவர்கள் 25 பேரும் தலா 7 ஆண்டு 3 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
2 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போதே ஒருவர் விபத்தில் மரணம் அடைந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் 28 பேரும் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர்.
இதில் 3 பேரின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. மற்ற 25 பேரும் தனித்தனியாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதை மாற்றி, ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் அவர்கள் அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்தால் போதும் என்ற நிலை ஏற்பட்டது. இந்த தீர்ப்பு கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 6ந் தேதி கூறப்பட்டது. ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து, தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேரும், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
மேல்முறையீடு மனுவை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சவுகான் ஆகியோர் விசாரித்தார்கள். கடந்த ஜுலை 28ந் தேதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இன்று (திங்கள்கிழமை) தீர்ப்பு கூறினார்கள். தீர்ப்பில், தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை உறுதியானது. நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




