நடைபெற உள்ள பீகார் சட்டமன்ற தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம்-லோக் ஜனசக்தி கூட்டணி வெற்றி பெற்றால் துணை முதல்வர் பதவியை முஸ்லிமுக்கு விட்டுத்தர தயாராக உள்ளதாக ராம் விலாஸ் பாஸ்வான் அறிவித்துள்ளார்.
லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரான பாஸ்வான், தனது சகோதரர் பசுபதி குமாரை துணை பீகார் முதல்வர் பதவியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக ஆளும் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணியும், காங்கிரஸ் கட்சியும் புகார் கூறி வருகின்றன.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்வான், எங்கள் கூட்டணி வென்றால் முஸ்லிம் ஒருவரை துணை முதல்வராக்குவது குறித்துப் பரிசீலிக்கத் தயாராக உள்ளோம். பிகார் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள சிறுபான்மையினர் முன்னேற எங்கள் கூட்டணி பாடுபட்டு வருகிறது என்றார்.
முஸ்லீம்களின் ஆதரவு இல்லாது ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதால் அவர்களது வாக்குகளைப் பெற அரசியல் கட்சிகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றனர். பிகாரில் தேர்தல் பிரச்சாரம் செய்ய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, வருண் காந்தி ஆகியோர் வரக் கூடாது என்று தனது கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு நிதிஷ் குமார் நிபந்தனையும் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய லாலு, பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கூட்டணிக்கு ஆதரவு பெருகியுள்ளதால் சட்டசபைத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




