வேலூர்: கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ந் தேதி கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில், அதிமுக பொதுச்செயலாளரும், அப்போதைய முதல்வரும் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்து கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து பல இடங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அந்த சமயத்தில் தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக பேருந்து, தர்மபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டியில் தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் கோகிலவாணி, காயத்திரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 30.08.2010 (திங்கள்கிழமை) அன்று தீர்ப்பு கூறினார்கள். தீர்ப்பில், தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை உறுதியானது
நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். தீர்ப்பு வெளியான பிறகு, வேலூர் மத்திய சிறையில் வழக்கில் தொடர்புடைய 3 தூக்குத் தண்டனைக் கைதிகளையும், அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் திங்கள்கிழமை மாலை நேரில் சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் இந்தச் சந்திப்பு நடந்தது. அவருடன் திருத்தணி எம்.எல்.ஏ. கோ.ஹரி, மாவட்டச் செயலர்கள் (கிழக்கு) எல்.கே.எம்.பி.வாசு, (மேற்கு) கே.சி.வீரமணி உடனிருந்தனர்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




