மும்பை: இங்கிலாந்து லார்ட்சில் நடந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டப் புகார் குறித்து விசாரணை அறிக்கை வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐ.சி.சி. தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்பவார், "இந்தப் புகார்கள் மிகவும் தீவிரமானவை. எனினும் லண்டன் போலீஸாரின் விசாரணை அறிக்கை கிடைத்த பிறகே இதன் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதற்காக ஐ.சி.சி. காத்திருக்கிறது. முழுமையான விசாரணை முடிவதற்குள் என்னால் எந்தக் கருத்தும் கூற முடியாது.
போலீஸாரின் விசாரணை அறிக்கை கிடைத்த பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஐ.சி.சி. முடிவு செய்யும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதில் ஈடுபட்ட வீரர்கள் மீது சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரியங்களே உரிய நடவடிக்கை எடுக்கும்.
எந்த கிரிக்கெட் வாரியமும் தவறு செய்தவர்களை பாதுகாக்க முயற்சிக்காது என உறுதியாக நம்புகிறேன். இது குறித்து இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுடன் பேச உள்ளேன்.
கைது செய்யப்பட்ட சூதாட்டத் தரகர் இந்திய சூதாட்டத் தரகர்களுடனும் தனக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ளார். அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இந்த விஷயம் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) உரிய நடவடிக்கை எடுக்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




