கொழும்பு: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. போரின் காரணமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை, மீண்டும் அவர்களுடைய வாழ்விடங்களில் குடியமர்த்தும் பணியை இலங்கை அரசு மேற்கொண்டு உள்ளது.
இதற்கு இந்தியா பெரும் அளவில் உதவி செய்து வருகிறது. இந்தியாவின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக இந்தியாவின் சார்பில் 50 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த 24ந் தேதி பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பதில் அளித்து பேசுகையில்; இலங்கையில் நடைபெற்று வரும் மறுவாழ்வுப் பணிகளை இந்தியா கண்காணித்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் அவர்களுக்கு கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் கூறினார்.
மேலும், இலங்கையில் நடைபெறும் மறுவாழ்வுப் பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக விரைவில் அந்த நாட்டுக்கு தான் செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார். அதற்கு முன்னதாக வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் அங்கு அனுப்பி வைக்கப்படுவார் என்றும் அப்போது அவர் கூறினார்.
இதற்கிடையே, இலங்கையில் நடைபெறும் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக முதல்வர் கருணாநிதி சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், மறுசீரமைப்பு பணிகளை பார்வையிட இலங்கைக்கு சிறப்பு பிரதிநிதி ஒருவரை மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருந்தார்.
பாராளுமன்றத்தில் அறிவித்தபடி, எஸ்.எம்.கிருஷ்ணா அக்டோபர் முதல் வாரத்தில் இலங்கை செல்வார் என தெரிகிறது. அதற்கு முன்னதாக, இலங்கையில் நடைபெற்று வரும் மறுவாழ்வுப் பணிகளை பார்வையிடுவதற்காகவும், எஸ்.எம்.கிருஷ்ணாவின் பயண ஏற்பாடுகளை செய்வதற்காகவும் இந்திய அரசின் சிறப்பு தூதராக வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் 3 நாள் சுற்றுப்பயணமாக திங்கள்கிழமை (30.08.2010) அன்று இலங்கை சென்றார்.
இன்று கொழும்பு போய்ச் சேர்ந்த அவர், அங்கிருந்து தமிழர்கள் வசிக்கும் பகுதிகளான வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, திரிகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்கு சென்று, அங்கு நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். திரிகோணமலையில் மீள்குடியேற்றப் பணிகள் குறித்து நிருபாமா நாளை ஆய்வு செய்கிறார். சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அரசின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசும் நிருபமா ராவ், தமிழர்களை அவர்களுடைய சொந்த வாழ்விடங்களில் குடியமர்த்த மறுசீரமைப்பு பணிகளை எந்தெந்த வகையில் துரிதப்படுத்துவது என்பது குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்துவார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




