இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

தி.மு.க. ஆட்சிக்கு இஸ்லாமியர்கள் பக்கபலமாக இருக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

E-mail அச்செடுக்க

சென்னை: தமிழ் மாநில தேசிய லீக் கட்சி சார்பில் சென்னை எழும்பூர் அசோகா ஹோட்டலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் சிறப்பு விருந்தினரக தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துக் கொண்டு பேசுகையில்:

சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக எப்போதும் விளங்குபவர் கருணாநிதி. 31 ஆண்டுகளாக நானும் தொடர்ந்து இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறேன். என்னுடைய  கோரிக்கை என்னவென்றால்,  அழைப்பிதழில் என்னுடைய பெயரை ஒவ்வொரு முறையும் சிறப்பு விருந்தினர் என்று குறிப்பிடுகிறீர்கள். நான் சிறப்பு விருந்தினர் அல்ல. நான் உங்களின் ஒருவனாக இருந்து இந்த வாய்ப்பை பெற்றுவருகிறேன். எனவே, அடுத்த ஆண்டாவது உங்களின் ஒருவனாக என்னைக் கருதி பங்குபெறும் வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும்.

கழக ஆட்சியில் தான் மீலாது நபிக்கு முதன் முதலாக அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. உருது பேசும் லப்பைகள், தெக்கனி முஸ்லிம்கள் ஆகியோரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததும் கருணாநிதி தான், அண்ணா சாலையில் உள்ள அரசினர் மகளிர் கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயரை சூட்டியதும் அவர் தான்.

இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் சமுதாய மக்கள் பெரும்பயன் எய்தும் வகையில் " சிறுபான்மையினர் நல ஆணையம்'' உருவாக்கப்பட்டது. ஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கை 2,000 என்பது 2,200 ஆக உயர்த்தப்பட்டு, 2008ல் 2,400 ஆகவும் உயர்த்தப்பட்டது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும்.

2000ம் ஆண்டு இஸ்லாமியரின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப்பட்டு 21.7.2000 அன்று உருது அகாடமி தொடங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோருக்கான 30 விழுக்காடு இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு, 3.5 சதவீத உள் ஒதுக்கீட்டினை 15.9.2007ல் அண்ணா 99வது ஆண்டு பிறந்த நாள் பரிசாக வழங்கியதும் தலைவர் கலைஞர்.

உலமாக்கள் நல வாரியம் ஏற்படுத்தப்பட்டதும். தமிழக மேலவையிலும், ராஜ்யசபாவிலும் முஸ்லிம் பிரதிநிதிகளை இடம்பெறச் செய்ததும் திமுக தான்.  5ம் முறையாக 2006ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி எப்போதும் இல்லாத அளவிற்கு இரண்டு இஸ்லாமியர்களை தமிழக அமைச்சர்களாக அமர்த்தி அழகு பார்த்தார். தொடர்ந்து முஸ்லிம் பெருமக்களுக்கு பாடுபட்டு, சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் கருணாநிதிக்கும் திமுக ஆட்சிக்கும் பக்க பலமாக இருந்து துணை புரிய நீங்கள் எல்லாம் உறுதி ஏற்க வேண்டும் என்று அன்போடு கேட்டு கொள்கிறேன் என்றார்.

நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, டி.பி.எம்.மைதீன்கான், சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், தமிழ்நாடு ஜமாதுல் உல மகா சபை தலைவர் அப்துல் ரகுமான் ஹஜ்ரத், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் கவிக்கோ அப்துல் ரகுமான், தமிழ்நாடு ஹஜ் கமிட்டித் தலைவர் பிரசிடென்ட் அபுபக்கர், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பேராயர் வின்சென்ட் சின்னத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.


கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்