காமன்வெல்த் போட்டிகளுக்கான மைதானங்களை பிரதமரே களம் இறங்கி தரையைத் துடைத்து வேலை செய்தாலும்,உரிய காலத்தில் தயாராகாது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
காமன்வெல்த் போட்டிகளுக்கான மைதாங்கள் இன்னும் தயாராகவில்லை. இதுகுறித்து குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது,காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. பிரதமரே கீழிறங்கி தரையைத் சுத்தம் செய்தாலும்கூட போட்டிகள் தொடங்குவதற்குள் மைதானங்கள் தயாராகும் என எனக்குத் தெரியவில்லை.
காமன்வெல்த் போட்டிகளை டெல்லியில் நடத்த 4 ஆண்டுகளுக்கு முன்பே ஒதுக்கீடு செய்து பணிகளைத் தொடங்கியும் இன்னும் மைதானங்களைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். போட்டிகளை அகமதாபாத்திற்கு ஒதுக்கி இருந்தால் இன்னேரம் எங்கள் ஊழியர்கள் வேலையை முடித்து தயாராக மைதானங்களைக் கொடுத்திருப்பார்கள்.
குஜராத்தின் வளர்ச்சியையும் என்னையும் பிரிக்க முடியாது. குஜராத்துக்கு சேவை செய்வதை நாட்டுக்கு செய்யும் சேவையாக நான் கருதுகிறேன். என்னையும், குஜராத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. குஜராத்தில் உள்ள ஒவ்வொருவரும் நலமாக இருக்க வேண்டும் என நான் கருதுகிறேன்.
இந்த மாநில மக்களுக்கு வேலை கிடைக்க வேண்டும், வளமுடன் வாழ வேண்டும் என்பதே எனது எண்ணம். இது நாட்டுக்கு நான் செய்யும் சேவை. வளர்ச்சித் திட்டங்களில் எங்களுடன் போட்டி போட உங்களால் முடியுமா? என டெல்லி சுல்தான்களுக்கு சவாலாகவே கேட்கிறேன் என்றார் மோடி.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




