திருவனந்தபுரம் பாலராமபுரத்திலுள்ள தனியார் பட்டறைக்கு வந்துசெல்லும் ஆயுதப்படை வேன்களிலிருந்த டீசல் திருடப்படுவதாக திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனர் அஜித் குமாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்தப் பட்டறையை ரகசியமாக கண்காணிக்கும்படி கமிஷனர் அஜீத் குமார் உத்தரவு பிறப்பித்ததன்பேரில் அந்த பட்டறையை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் புளூங்குடி ஆயுதப்படை முகாமிலிருந்து ஒரு வேன் அங்கு வந்தது. அப்போது ஆயுதப்படை முகாமில் போலீசாக பணிபுரியும் வேன் டிரைவர் பால்,பட்டறை உரிமையாளர் அபூபக்கர் ஆகியோர் வேனில் இருந்து டீசலை திருடிக் கொண்டிருந்தனர்.
உடனடியாக அங்கு சென்ற போலீசார், டிரைவர் பால் மற்றும் அபூபக்கரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 30 லிட்டர் டீசல் கைப்பற்றப்பட்டது.கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் ஆயுதப்படைக்கு சொந்தமான வேன்களில் டீசல் திருடியது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




