ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நிகழ்ந்த அதிசயம்: இறந்த குழந்தைக்கு தாயின் அரவணைப்பில் உயிர் மீண்டது.
டேவிட்-ஜேட் தம்பதியினர் சிட்னி நகரைச் சேர்ந்தவர்கள். ஏழுமாத கர்ப்பமாக இருந்த ஜேட் தனக்கு ஆண் குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு ஜேமி என்ற பெயர் சூட்ட முடிவு செய்தனர். ஜேட்டுக்கு சமீபத்தில் மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிறந்தபின் அந்தக் குழந்தையிடம் இருந்து எந்த அசைவும்இல்லாமல் போனதால், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
குழந்தையின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாதிருக்கவும் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். தன் பச்சிளம் குழந்தை இறந்துவிட்டதை சிறிதும் நம்ப முடியாத ஜேட், குழந்தையை மார்போடு கட்டி அணைத்துக் கொண்டு, முகத்தோடு முகம் வைத்து கொஞ்சியபடி கண்ணீர் வடித்தார். டேவிட்டும் அழுது கொண்டே, குழந்தையின் தலையை மென்மையாக தடவிக் கொடுத்தார். இரண்டு மணி நேரமாக இந்த பாசப் போராட்டத்தில் அழுதுகொண்டிருந்த ஜேட், குழந்தையின் காதுக்கருகே சென்று மெல்லிய குரலில் விசும்பலுடன் பேசினார். அப்போது தான், யாரும் எதிர்பாராத அந்த அதிசயம் நடந்தது. இறந்து விட்டதாக கூறப்பட்ட அந்த குழந்தையின் உடலில் சிறிய அசைவு காணப்பட்டது. அந்த பச்சிளம் குழந்தையின் கைகள் மெதுவாக நீண்டு, தன் தாயின் கரங்களை இறுகப் பற்றியது. இந்த ஆச்சரிய நிகழ்வை நம்ப முடியாமல் கேட், சில நிமிடங்கள் திகைத்துப் போனார். அவரது கணவர் டேவிட், உடனடியாக ஓடிச் சென்று டாக்டரை அழைத்து வந்தார். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், "இது வழக்கமாக நடப்பது தான். இறந்து விட்ட குழந்தை, மீண்டும் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை' என்று உறுதியாக தெரிவித்து விட்டனர்.
ஆனாலும் விட்டுக் கொடுக்க விரும்பாத ஜேட், மார்போடு அணைத்துக் கொண்டு, அந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டினார். அதை குழந்தை, ஆர்வத்துடன் குடித்தது. அங்கு நின்றிருந்த டாக்டர், இதை நம்ப முடியாமல் மீண்டும் குழந்தையைப் பரிசோதித்தார். அப்போது அவர், குழந்தையின் இருதயத் துடிப்பு சீராக இருப்பதையும், குழந்தை சரியாக மூச்சு விடுவதையும் உறுதி செய்தார். பின்னர் அவர்,"என்னால் நம்பவே முடியவில்லை. ஆச்சரியத்தில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.குழந்தை பிழைத்து விட்டது என்பது உண்மை'என்றார்.
ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் திக்கு முக்காடிப் போன ஜேட், இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குழந்தை இறந்து விட்டதாகக் கூறியதை அடுத்து, அதை மார்போடு அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டேன். என் வாயில் என்ன தோன்றியதோ அதை குழந்தையின் காதருகே, அழுகையுடன் கிசு, கிசுத்தேன். "உனக்கு ஜேமி என பெயர் வைத்திருக்கிறோம்; உனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள் தெரியுமா? நீ எங்களுக்கு வேண்டும்; உன்னை விட்டு எங்களால் பிரிந்து இருக்க முடியாது' என, கூறினேன். இரண்டு மணி நேரமாக, குழந்தையை மார்பில் வைத்துக் கொண்டு, அழுதபடி இருந்தேன். அப்போது திடீரென குழந்தையிடம் அசைவு தெரிந்தது. மெல்ல கண் திறந்து பார்த்தது. அதன் பிஞ்சுக் கரங்கள், என் கை விரல்களை மென்மையாக பற்றியபோது, எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த நேரத்தில் இந்த உலகத்திலேயே மிக மகிழ்ச்சியான தாய், தந்தையர்கள் நானும், என் கணவரும் தான். என்று ஜேட் உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.

எழுதியவர்: Muhammed, September 03, 2010
| < முந்தையது | அடுத்தது > |
|---|






