ஆஸ்திரேலியா: இந்தியாவை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் திட்டம் உளவுத்துறைத் தகவல் எங்களுக்கு வந்துகொண்டேயிருக்கிறது. இந்த தகவல் உறுதியானது. இதனால் இந்தியாவில் இருக்கும் ஆஸ்திரேலியர்கள் இந்த எச்சரிக்கையை கவனத்தில் கொள்ளவேண்டும் என்று ஆஸ்திரேலியா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய அரசு விடுத்துள்ள எச்சரிக்கையில் காஷ்மீரில் தொடர்ந்து வன்முறைகள் நடக்கின்றன. இதனால் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடக்கிறது. இதனால் ஆஸ்திரேலியர்கள் காஷ்மீர் செல்ல வேண்டாம். மேலும் தீவிரவாதிகள் டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களை தகர்க்க சதித்திட்டம் தீட்டியுள்ளனர். அரசியல் மற்றும் பாதுகாப்புமிக்க இடங்களும் அவர்களின் இலக்கில் உள்ளன.
இந்தியாவிற்குள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பயணம் செய்ய விரும்பும் ஆஸ்திரேலியர்கள் நன்கு யோசித்து பயணிக்க வேண்டும். அங்கு கடந்த காலங்களில் வெளிநாட்டவர்கள் மீது நடத்தப்பட்ட மும்பை தாக்குதல் சம்பவம் உள்ளிட்ட தீவிரவாத சம்பவங்களை மறந்துவிடக்கூடாது. சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முன் தாங்கள் செல்ல கூடிய இடத்தில் எந்த அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன என்பதை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.
அசாம், நாகலாந்து, திரிபுரா, மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுகிறது. அங்கு கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், வழிப்பறி போன்ற சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. இதனால் இந்த மாநிலங்களுக்கு செல்வதையும் ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். என ஆஸ்திரேலிய அரசு எச்சரித்துள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




