பீகார்: ராணுவ காவல்துறையை சேர்ந்த 4 காவலர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த மாவோயிஸ்டுகள் அவர்கள் நால்வரில் ஒரு உதவி ஆய்வாளரை கொலை செய்தனர்.
மேலும் இதை தொடர்ந்து மீதியுள்ள மூன்று காவலர்களையும் கொல்லப்போவதாக அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். பீகார் மாநிலம் லக்கிசாரை மாவட்டம் கஜ்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த கடந்த 29.08.2010 அன்று காவல்துறைக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
அப்போது உதவி ஆய்வாளர்கள் ரூபேஷ் குமார், அபய்பிரசாத் யாதவ், பீகார் ராணுவ காவல் துணை உதவி ஆய்வாளர் லூகாஸ் டெடே, பீகார் ராணுவ காவலர் எடேஷம்கான் ஆகியோரை மாவோயிஸ்டுகள் கடத்தி சென்றனர். சிறையில் இருக்கும் 8 மாவோயிஸ்டு தலைவர்களை விடுதலை செய்தால்தான், 4 போலீஸ் அதிகாரிகளையும் விடுவிப்போம் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்தனர்.
இந்நிலையில், கடத்தப்பட்டு பிணைக்கைதியாக இருப்பவர்களில் ஒருவரான சப் இன்ஸ்பெக்டர் அபய்பிரசாத் யாதவை மாவோயிஸ்டுகள் 02.09.2010 அன்று கொலை செய்தனர். இத்தகவலை மாவோயிஸ்டுகளின் செய்தித்தொடர்பாளர் அவினாஷ், தனியார் செய்தி சேனல்களை தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
கெடு' முடிந்தும், எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. எனவே, ஜன அதாலத்' எனப்படும் நீதிமன்றத்தை கூட்டி அதில், உதவி ஆய்வாளர் அபய்பிரசாத் யாதவை கொலை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அவர் கொல்லப்பட்டார். அவரது உடல், இரவில் ஒப்படைக்கப்படும். பீகார் அரசுதான் எங்களை இந்த முடிவுக்கு தள்ளியது என்று அவினாஷ் கூறினார்.
மேலும், தங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால், எஞ்சியுள்ள மூன்று காவல்துறை அதிகாரிகளையும் கொலை செய்யப் போவதாக அவினாஷ் மிரட்டல் விடுத்தார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




