இலங்கை அரசியல் யாப்புச் சீர்திருத்தம் தொடர்பான நாடாளுமன்ற விவாதமும் அதற்கான வாக்கெடுப்பும் எதிர்வரும் 8 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளன. நேற்று (02.09.2010) மாலை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் புதன்கிழமை காலை 9.30 மணி முதல் இரவு 7 மணிவரை புதிய அரசியல் யாப்புச் சீர்திருத்தம் தொடர்பான விவாதமும் அதைத் தொடர்ந்து வாக்கெடுப்பும் மேற்கொள்ளப்படவுள்ளன. மேற்படி அரசியல் யாப்புச் சீர்திருத்தம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (07.09.2010) காலை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
மேற்படி யாப்புச் சீர்திருத்தம் குறித்த விவாதத்தை 8 ஆம் திகதியும் வாக்கெடுப்பை 9 ஆம் திகதியும் நடாத்துவதென ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், இரண்டையும் ஒரே தினத்திலேயே மேற்கொள்ளுதல் வேண்டும் என கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது ஆளும்கட்சி கூறியுள்ளது.
எனவே, 8 ஆம் திகதி யாப்புச் சீர்திருத்தம் பற்றிய விவாதமும் வாக்கெடுப்பும் ஒரே தினத்தில் அடுத்தடுத்து இடம்பெறுவதோடு, 07 ஆம் திகதி பிற்பகல் 1 மணி முதல் இரவு 7 மணி வரை அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பது தொடர்பாகவும், 09 ஆம் திகதி பிற்பகல் 1 மணி முதல் இரவு 7 மணிவரை அரசாங்க சட்ட மூலங்கள் தொடர்பாகவும் இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளன.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




