சென்னை: மக்களின் வீட்டுக் கதவை தட்டி தகுதியான ஆசிரியர்களுக்கு வேலை வழங்கி வருவது திமுக அரசு என, அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
பள்ளிக் கல்வித்துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 1,913 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் கலந்தாய்வு சென்னையில் நடைபெற்றது. கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பணி நியமன உத்தரவுகளை வழங்கி பேசினார் அப்போது அவர் கூறுகையில்.. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்தவர்களின் வீட்டுக் கதவுகளை தட்டி, தி.மு.க., அரசு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
இன்றைய கலந்தாய்வில் தமிழ் ஆசிரியர்கள் 441 பேர், ஆங்கில ஆசிரியர்கள் 312 பேர், கணித ஆசிரியர்கள் 175 பேர், அறிவியல் ஆசிரியர்கள் 318 பேர், சமூக அறிவியல் ஆசிரியர்கள் 667 பேர் என 1,913 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துவிட்டு, பல ஆண்டுகளாக காத்திருப்பவர்களால் போட்டித் தேர்வில் தேர்வு பெற முடியாத நிலையை கருத்தில்கொண்டு, இடைநிலை ஆசிரியர்களைப் போல், மற்ற ஆசிரியர்களும் பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படும் என்று முதல்வர் கருணாநிதி கொள்கை முடிவு எடுத்தார்.
அதன் காரணமாக, இன்றுடன் சேர்த்து 56 ஆயிரத்து 471 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தற்காலிக அடிப்படையில் பணியாற்றிவந்த 40 ஆயிரம் பேரை, பணி நிரந்தரம் செய்துள்ளோம். மொத்தத்தில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




