போளூர்: திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் சட்டமன்ற தொகுதிக்கான பாமக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் அணியினருக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை பாமக நிறுவனர் ராமதாஸ் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய ராமதாஸ், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு உடனடியாக நடத்த வலியுறுத்தி வரும் 18ஆம் தேதி பாமக சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தொலைக்காட்சி உள்ளிட்ட இலவசங்களை வழங்காமல் நலவாழ்வை அளிக்க அரசு முன்வர வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் கழிவறை கட்டிக்கொடுங்கள். இந்தியாவிலேயே பின் தங்கிய மாநிலம் பீகார். அந்த மாநிலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் கழிவறை உள்ளது. இந்த திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்து செயல்படுத்த வேண்டும் என்றார்.
பின்னர் பேசிய அன்புமணி ராமதாஸ், கிராமப்புற நலனுக்காக நான் அமைச்சராக இருந்தபோது, தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டம், 108 அவசர ஊர்தி சேவை திட்டங்களை கொண்டு வந்தேன். இந்தியாவிலேயே ஐ.நா. அவையால் பாராட்டப்பட்ட ஒரே திட்டம் இந்த சுகாதாரத்திட்டம்தான்.
ஒரு பக்கம் இலவசம். மறுபக்கம் டாஸ்மாக் கடை. 1995ஆம் ஆண்டு மதுபானம் மூலம் அரசுக்கு 1400 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டு மதுக்கடை மூலம் 13 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளது. தமிழகத்தில் மது விற்பனை மூலம் அடுத்த ஆண்டு 15 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்ட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏழைகளின் வயிற்றில் அடித்து, கிடைக்கும் இந்த வருமானம் மூலம் இலவசங்களை வழங்க வேண்டாம். அதற்கு பதிலாக இலவச கல்வி, வேலைவாய்ப்பு வழங்க அரசு முன்வர வேண்டும் என்றார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




