ஐதராபாத் : ஆந்திர மாநிலத்தில் பி.எஸ்.என்.எல்., மொபைல்போன் பேன்சி எண் 4 லட்சத்து 11 ஆயிரத்து 419 ரூபாய்க்கு ஏலம் போனது. வாடிக்கையாளர்கள் வரிசையாக ஒரு இலக்கம், இரண்டு இலக்கம் கொண்ட பேன்சி எண்களை கொண்ட சிம் கார்டுகளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு விற்பதற்காக 2ம் தேதி ஆந்திர மாநில பி.எஸ். என்.எல்., பிரிவு ஏலம் விட முடிவு செய்து அறிவித்தது.
இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பியது. கடந்த மாதம் 20ம் தேதி காலை 10 மணி முதல் 30ம் தேதி காலை 10 மணி வரை 9 தவணையாக 10 எண்கள் ஏலம் கேட்கப்பட்டது. எஸ்.எம்.எஸ்., மூலம் நடந்த இந்த ஏலத்தில் பங்கு கொண்ட வாடிக்கையாளர் ஒருவர் அதிகபட்சமாக 4 லட்சத்து 11 ஆயிரத்து 419 ரூபாய்க்கு ஏலம் கேட்டு 9494949494 எண்ணை பி.எஸ்.என்.எல்., அதிகாரிகளிடம் பதிவு செய்து கொண்டார்.
குறைந்தபட்சமாக 84 ஆயிரத்து 490 ரூபாய்க்கு வாடிக்கையாளர் ஒருவர் 8985000000 என்ற எண்ணை ஏலம் கேட்டு பெற்றார். அதிர்ஷ்ட எண்களை பெற்று கொண்டவர்கள் 3ம் தேதி காலை 10 மணி முதல் 15ம் தேதி மாலை 5 மணிக்குள் ஏலம் தாங்கள் கேட்ட முழுத் தொகையையும் செலுத்தி சிம் கார்டுகளை பெற்று செல்லலாம். அதிக தொகைக்கு ஏலம் கேட்டவர் வராவிட்டால் அவருக்கு அடுத்தபடியாக ஏலம் கேட்ட வாடிக்கையாளருக்கு அந்த எண் ஒதுக்கப்படும் என, பி.எஸ்.என்.எல்., பிரிவின் பொது மேலாளர் அனந்தராவ் தெரிவித்தார். இந்த ஏலத்திற்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது எனவும் தெரிவித்தார்.
ஏலம் போன பேன்சி எண்கள் வருமாறு: 94949 49494, 9494799999, 94946 66666, 94948 88888, 94948 88999, 9494111111, 94949 49999, 9494555555, 94944 99999 மற்றும் 8985000000. இவை முறையே 4 லட்சத்து 11 ஆயிரத்து 419 ரூபாய், 2 லட்சத்து 29 ஆயிரத்து 93, 2 லட்சத்து 26 ஆயிரத்து 115, ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 450, ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 420, ஒரு லட்சத்து பத்தாயிரத்து 300, ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 785, 88 ஆயிரத்து 130, 84 ஆயிரத்து 821 மற்றும் 84 ஆயிரத்து 490 ரூபாய்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




