வவுனியா:சென்ற வருடம் வன்னியில் இடம்பெற்ற புலிகளுக்கெதிரான போரின் போது சிறிலங்கா அரசு படையினரால் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த தமிழீழ புலிகளின் போராளிகள் 508 பேர் நேற்று அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள்.
வவுனியா புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சிறிலங்காவின் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் விஜித விஜிதமுனி சொய்சா இவர்களை அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்தார். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் 113 பெண்கள் உட்பட 246 பேர் அண்மையில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களாவர்.
அத்துடன், சிறிலங்கா படைத்தரப்பால் மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் முடித்து வைக்கப்பட்;ட 50 தம்பதிகளும் மற்றும் தொழில் பயிற்சி பெற்றதாகக் கூறப்படுகின்ற இளைஞர், யுவதிகளும் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் 11,000 போராளிகளில்இன்னும் 7,500 பேர் வரையில் சிறிலங்கா படைத்தரப்பின் முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் குற்றச் செயல்கள் புரிந்ததற்கான ஆதாரங்கள் உள்ளவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும், ஏனையோர் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் இந் நிகழ்வில் கலந்து கொண்ட புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் விஜித விஜிதமுனி சொய்சா தெரிவித்துள்ளார் இந் நிகழ்வில் சிறிலங்காவின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க, வன்னிப் பிராந்திய படைத் தளபதி கமால் குணரத்ன உட்பட முக்கிய படைத்தரப்பு அதிகாரிகளும், வன்னிப் பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபரும் கலந்து கொண்டார்கள்.
வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது சிறிலங்காப் படைத்தரப்பால் கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த விடுதலைப் புலிகளின் போராளிகள் பலர் புனர்வாழ்வு எனும் பெயரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




