கல்வி நிறுவனங்களில் நடைபெறும் "ராகிங்" என்ற மோசமான நிகழ்வை ஆசிரியர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வலியுறுத்தினார். தில்லியில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 5) ஆசிரியர் தினத்தையொட்டி 374 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கிப் பேசுகையில் பிரதிபா பாட்டீல் இதை வலியுறுத்தினார்.
கல்லூரிகளில் நடைபெறும் ராகிங் நிகழ்வுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து அவர் மேலும் பேசியது: நாடு முழுவதும் கல்லூரிகளில் மூத்த மாணவர்கள் தங்களுக்கு கீழ் படிக்கும் மாணவர்களை ராகிங் என்ற பெயரில் கொடுமைப்படுத்துவது பரவலாக நடைபெறுகிறது. கல்லூரி மாணவர்களிடம் சகிப்புத் தன்மை இல்லாததையே இது காட்டுகிறது.
ராகிங் எங்கு நடந்தாலும் கண்டிக்கத்தக்கது. இது தொடர்வது ஆரோக்கியமானதல்ல. கல்வி நிறுவனங்களில் நடைபெறும் ராகிங்கை முற்றிலும் ஒழிப்பதற்கு ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும்.
அனைவருக்கும் கல்வி கிடைக்க முயற்சி எடுத்து வருகிறோம். இதை அடிப்படை உரிமையாக்கியுள்ளோம். அனைவருக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்வதென்பது தனிப்பட்டவருக்கான பொறுப்பல்ல. இதில் அனைவருமே பங்கேற்க வேண்டும். அனைவருக்கும் கல்வி அளிப்பதென்பது சவாலான விஷயமாக இருந்தாலும் சாத்தியமான ஒன்றுதான்.
அனைவருக்கும் கல்வி கிடைக்க ஆசிரியர்கள் பாடுபட வேண்டும். மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வரும் சூழலை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு மாணவர் மீதும் தனிக் கவனம் செலுத்த ஆசிரியர்கள் முன் வரவேண்டும். மாணவர்களின் பிரச்னைகளை அறிந்து அவர்கள் அதில் இருந்து மீண்டுவர உதவ வேண்டும். மாணவர்களின் பெற்றோர்களுடன் தொடர்பை வைத்துக்கொண்டால் மாணவர்களின் பிரச்னைகளை எளிதாக அறிந்து கொள்ள இயலும்.
கிராமப்புறங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு தினசரி வருகை தர வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு தினசரி வருவதை உறுதி செய்ய வேண்டும்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி ரஷியாவில் பயணம் மேற்கொண்டிருந்தேன். அந்த பயணத்தை என்னால் இதுவரை மறக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அந்த பயணம் இனிதாக அமைந்தது. இந்திய சுதந்திரத்தின் 10-ம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் விதத்தில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 1957-ல் பள்ளிக்கூடம் ஒன்று கட்டப்பட்டது.
அந்த பள்ளியில் முழுக்க முழுக்க இந்திய கலாசாரமே பின்பற்றப்படுவதாக நான் கேள்விப்பட்டேன். இதனால் கவரப்பட்டு அப்பள்ளிக்கு சென்றேன். அங்கு போய் பார்த்தால் இந்திய கலாசாரம் போற்றப்படுவது கண்டு வியப்படைந்தேன். மகிழ்ந்தேன். பல்வேறு கலாசாரத்தை போற்றும் நிலை உலகம் முழுவதும் உள்ளது என்பதை அறிந்து பெருமைப்பட்டேன் என்றார் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்.
வெளிப்படைத்தன்மை அவசியம்: இந்த விழாவில் பேசிய மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், ஆசிரியர்கள் நியமனம், பணியிட மாற்றம் ஆகியவை வெளிப்படையாக நடைபெறும் விதத்தில் அனைத்து மாநிலங்களும் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதுபோன்ற விதிமுறைகளை வகுத்து தீவிரமாகக் கடைப்பிடித்தால்தான் கல்வி உரிமை சட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




