பழனி: ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்துள்ள கல்லூரி பேராசியர் ஒருவர், வகுப்பறையில் மீண்டும் ஆபாச வார்த்தைகள் பேசுவதாக மாணவிகள் கூறியுள்ள குற்றச்சாட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக உள்ள அக்னிபுத்திரன் என்பவர், தங்களிடம் ஆபாசமாக பேசி வருகிறார் என, கல்லூரி மாணவிகள் புகார் கூறியுள்ளனர். அவரை கல்லூரியில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என கூறி மாணவ மாணவிகள் இன்று கல்லூரி எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது காவல்துறையினர் அவர்களை கலைக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது மாணவ மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், பேராசிரியர் அக்னிபுத்திரன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை ஏற்காத மாணவ மாணவிகள் தொடர்ந்து போராட போவதாக கூறினர்.
மாணவ மாணவிகளின் போராட்ட முடிவால், வரும் 13ஆம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. பல்வேறு புகார்களால் ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்ட அக்னி புத்திரன், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில் கடந்த 4 நாட்களாக கல்லூரியில் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




