
நம் உடலிலிருந்து இரத்தம் வெளியேற்றினால் முதுமையும் உடலில் சுருக்கங்களும் வேகமாக வராது என்று என் நண்பன் கூறுகிறான், உண்மையா? - ரமேஷ், வேதாரண்யம்.
நமது உடலில் ஓடும் இரத்தத்திலும் உடலின் திசுக்களிலும் நீரே நிறைந்திருக்கிறது.வயது கூடிக்கொண்டே போகும்போது உடலில் உள்ள நீரின் அளவு பாதியாகக் குறைவதால் மனிதனின் தோல் மெல்ல மெல்ல 'எலாஸ்டிக்' தன்மையை இழக்கத் தொடங்கும். இதனால் முகம் உட்பட உடலில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. இது இயற்கை.

புகை, மது போன்ற தீய பயக்கும் பழக்கமும் தோல் சுருக்கத்துக்குக் காரணமாகலாம்..
வைட்டமின் சி , கால்ஸியம், மக்னீஷியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் நிறந்த காய், கனிகளை உண்டு நிறையத் தண்ணீர் குடித்து வந்தால் தோலின் மினுமினுப்பு நிற்கும்.
ரத்தத்தை வெளியேற்றினால் முதுமையும் உடல் சுருக்கங்களும் வாரா என்றால் தொடர்ந்து இரத்த தானம் செய்பவர்கள் என்றும் இளமையோடு அல்லவா காட்சியளிப்பார்கள்.

நம் நாட்டில் பூரண மதுவிலக்கு சாத்தியமா? - கமலுதீன், பரங்கிப்பேட்டை.
இந்தியாவிலா? தமிழ்நாட்டிலா?
முழுமையான மதுவிலக்கு என்று அரசு அறிவித்துச் சட்டம் இயற்றினாலும் நடைமுறையில் சாத்தியம் இல்லை.
கள்ளச்சாராய வியாபாரம் கொடிகட்டிப் பறக்கும்; காவல்துறையினருக்கு வருமானம் கொட்டும் என்பதே கடந்த காலங்களில் மதுவிலக்கு நமக்குக் காட்டிய பாடம்.

முறையற்ற உறவில் ஈடுபடும் பெண்ணை விபச்சாரி எனக்கூறும் நம் சமூகம், அவளுடன் முறையற்ற உறவில் ஈடுபட்ட ஆணை எதுவும் கூறுவதில்லையே ஏன்? - ஷிகாபுதீன், சென்னை .
கற்பு எனும் ஒன்று பெண்களுக்கு மட்டும் உரியது; ஆண்களுக்கு அப்படி ஏதும் இல்லை என்று தவறாகக் கருதியதால் பெண்களை மட்டும் இழிபெயரிட்டு அழைக்கின்றனர்.
விபச்சாரி என்று பெண்ணைக் கைது செய்யும் சட்டமும் கூட ஆணை சாட்சியாகத்தான் சேர்க்கிறது.
இது தொடர்பாய் முன்னர் 23/05/2010 இந்நேரம் தளத்தில் .நாம் அளித்த விடையையும் பார்க்கவும்.

அன்றாடங்காய்ச்சிகள் உள்ள இந்தியாவில் ஆடம்பர ப்ளாக்பெர்ரி போன்கள் தடை பரபரப்பாக பேசப்படும் முரண்பாடு குறித்து - துரை, காட்டுமன்னார்குடி.
பிளாக்பெரி மீதான தடை நாட்டுப் பாதுகாப்புத் தொடர்பானது என அரசு கருதுகிறது.அரசின் ஐயங்களை பிளாக்பெரிக்காரர்கள் போக்கிவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும்.
நாடாளும் மன்ற உறுப்பினர்கள் தங்களுக்குச் சம்பளம் போதாது என்று போராடுதை வைத்து, "அன்றாடங்காய்ச்சிகள் உள்ள இந்தியா" என்ற முடிவுக்கு வந்து விட்டீர்களோ?

99 ரன்னில் இருக்கும் போது வேண்டுமென்றே பைஸும் நோ பாலும் போட்டு சேவாக்கை சதம் எடுக்க விடாமல் தடுத்த இலங்கை அணியின் செயல் குறித்து அய்யாவின் கருத்து என்ன? - உவைஸ், மதுரை.
விளையாட்டை விளையாட்டாகப் பார்க்காமல் நட்டுப் பற்றுடன் இணைத்து, இரு நாடுகளுக்கிடையேயான போர் போன்ற வெறியை இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் உருவாக்கிக் கொண்டது ஒருபுறம்.
விளையாட்டை விளையாட்டாகப் பார்க்காமல் தனி நபர் விரோதமாகப் பார்த்து, அவன் சதம் அடித்துப் பெயர் வாங்குவதா என்ற இழிந்த வெறி இன்னொரு புறம்.
நாட்டுப் பற்றும் இல்லாமல் தனி நபர் விரோதமும் இல்லாமல், பணம் ஒன்றே குறிக்கோளாய்க் கொண்டு "மேட்ச்ஃபிக்ஸிங்" எனும் சூதாட்டம் மற்றொரு புறம்.
கிரிக்கெட் விளையாட்டிற்கு ஆசிய நாடுகள் கொடுக்கும் அதீத முக்கியத்துவமே இவற்றுக்கெல்லாம் காரணம்.
கிரிக்கெட்டர்களுக்கு அளவுக்கு மீறிப் பணமும் புகழும் கிடைப்பதைக் குறைத்துவிட்டால் இவையெல்லாம் நடைபெறா!

பாமகவையும் தேதிமுகவையும் இணைத்துக் கொண்டு அதன் பிறகு யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று முடிவு செய்யலாம் என்கிற காங்கிரஸின் புதிய திட்டம் ஒர்க் அவுட்டாகுமா? - வசீகரன், பரமக்குடி
ஆகலாம்! அது கருணாநிதிக்கு சற்றுக் கவலையும் அளிக்கலாம். அரசியலில் ஓரிரவுக்குள் ஆயிரம் திருப்பங்கள் வரும்.
உதாரணம் மூப்பனாரும் சிதம்பரமும் சேர்ந்து த.மா.கா. வை உருவாக்கியது. நரசிம்மராவையும் ஜெயலலிதாவையும் ஒரே குத்தில் வீழ்த்திய அற்புதமான திருப்பம்.

பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழக அரசியல் மிகவும் தரம் தாழ்ந்து இருப்பது ஏன்? - நாதன், துபாய்.
நீங்கள் சரியாக ஒப்பிடவில்லை எனத் தோன்றுகிறது. உ.பி யையும் பீகாரையும் விடத் தமிழ்நாட்டு நிலைமை மோசமில்லை
துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியை கொல்ல முயற்சி செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே? - இம்தியாஸ், சின்ன சேலம்.
ஊடகங்களுக்குத் தெரிவிக்காமல் இரகசியமாகப் புலன் விசாரணைகள் நடந்துகொண்டிருக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.
காதல் தெய்வீகமா? கத்தரிக்காயா?- பாபு, சென்னை - 18.
காதல் என்றால் என்னவென்று உங்களுக்குப் புரியாததால் இப்படி வினவி விட்டீர்கள்.
உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. சின்னத்திரைத் தொடர்களும் திரைப்படங்களும் காட்டும் காதலைக் கண்டு, பள்ளி / கல்லூரி மாணவ மாணவியர் நடத்தும் இன ஈர்ப்பு infatuation நாடகத்தை மட்டுமே நீங்கள் பார்த்து வருவதால் அது கத்தரிக்காயாக உங்களுக்குத் தோன்றியிருக்கிறது.

ஆறுவது சினம் என்கிற ஒளவையாரும் ரெளத்திரம் பழகு என்கிற பாரதியாரும் முரண்பாடில்லையா?- அபுநஜ்லா, போர்ட்டோநோவோ.
முரண் இல்லைபாம்பு சீறுவதைப்போல் சினம் காட்ட ரெளத்திரம்
கொத்தாமல் இருப்பதற்கு ஆறுவது சினம்.
இரண்டும் வேறு வேறாம்.
ஆறுவது சினம் என்பது கோபம் வந்தாலும் அதனை அடக்கிக் கொள்வதைப் பற்றியது.
செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான் என்பதாம்.
பாதகம் செய்வோரைக் கண்டால் நீ பயங்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா; அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா என்றதால் ரெளத்திரம் பழகு
நம்மை விட வலிமை குறைந்தவர்களிடத்தில் கோபம் வரும்போது ஔவையாரை பின்பற்றுங்கள்
சண்டியர்கள் சண்டித்தனம் செய்யும்போது பாரதி பக்கம் இருங்கள்.
உங்கள் பெயரையும் ஊர்ப் பெயரையும் பார்த்தால் நீங்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே வசிப்பவர் போல் தெரிகிறதே?.

மதானி கைது விவகாரத்தில் கேரள - கர்நாடக அரசுகளிடையே மோதற்போக்கு காணப்படுகிறதே? - யாசீன், அடியக்கமங்கலம்.
கோவை குண்டுவெடிப்பு வழக்கிற்காக மதானியை முதலில் கைது செய்து, தமிழ்நாட்டுக் காவல்துறையிடம் ஒப்படைத்தது அன்று கேரளாவை ஆண்டு கொண்டிருந்த ஈ.கே.நாயனார் முதல்வராயிருந்த மார்க்ஸிஸ்ட் தலைமையிலான இடது முன்னணி அரசு. அப்போது தமிழ்நாட்டு அரசுக்கும் கேரள அரசுக்கும் இடையில் மதானி கைது தொடர்பாக மோதல் ஏற்படவில்லை. ஏனெனில் அப்போது மதானியை மார்க்ஸிஸ்டுகளுக்குப் பிடித்திருக்கவில்லை; அதனால் பிடித்துக் கொடுத்தனர்.எட்டு ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின் மதானி, "நிரபராதி" என விடுதலை பெற்றபின், மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள உள்துறை அமைச்சர் கோடியேறி பாலகிருஷ்ணன் தலைமையில், மதானி "அரசு விருந்தினராக" வரவேற்கப்பட்டார்.
வி.எஸ்.அச்சுதானந்தன் முதல்வராயிருக்கும் மார்க்ஸிஸ்ட் தலைமையிலான இடதுமுன்னணி அரசுக்கு இப்போது மதானி பிடித்தமானவராகி விட்டதால், அவரைப் பிடிக்க வந்த கர்நாடகக் காவல் துறை அதிகாரிகளைக் காக்க வைத்தபோது கர்நாடக அரசுடன் மோதல் போன்ற ஒரு தோற்றம் ஊடகத்தால் உருவாக்கப் பட்டுவிட்டது.
| கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் இங்கே க்ளிக்கவும். |
பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழக அரசியல் மிகவும் தரம் தாழ்ந்து இருப்பது ஏன் ? - நாதன், துபை
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




