அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 62-வது பிறந்த நாளையொட்டி மதுரை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் ஏழை-எளிய மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் செல்லூர் சோலை மகாலில் நேற்று நடந்தது. அ.தி.மு.க. பொருளாளர் ஓ.பன்னீர்செல்லவம் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் முகாமில் கலந்து கொண்ட 2 ஆயிரம் பேருக்கு ஹார்லிக்ஸ் பாக்கெட்டுகளை வழங்கி பேசினார்.
அவர் பேசும் போது, ’’அதிமுக ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்வதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனது பிறந்த நாள் அன்று யாரும் தன்னை சந்திக்க வரவேண்டாம். ஏழை எளிய மக்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று உதவிகளை செய்யுங்கள் என கட்டளையிட்டுள்ளார்.
அதன்படியே மருத்துவமுகாம், இலவச வேட்டி, சேலை, ஊனமுற்றோர்களுக்கு ஊன்றுகோல் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்டந் தோறும் கட்சியினர் செய்து வருகிறார்கள்.தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதற்கு எடுத்துக்காட்டு தான் கோவை, திருச்சியில் கூடிய மக்கள் கூட்டம்.
இந்த கூட்டம் எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுகவிற்கு வாக்களிக்க தயாராகி விட்டார்கள் என்பதை உணர்த்துகிறது. இதை உணர்ந்து அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் வெற்றிக்கனியை பறிக்க கடமை உணர்வுடன் பணியாற்ற வேண்டும்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




