புதுடெல்லி:அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்துவது தொடர்பான, அணு விபத்து இழப்பீடு மசோதா, சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்கள் அமைக்கும் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால், அந்நிறுவனங்கள் தர வேண்டிய நஷ்டஈட்டு தொகை, இம்மசோதா மூலம் நிர்ணயிக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் நிர்ப்பந்தத்தால், நஷ்டஈடு, 500 கோடியில் இருந்து ரூ.1,500 கோடியாக உயர்த்தப்பட்டது.மேலும், அணு உலைக்கு உபகரணங்களை சப்ளை செய்யும் நிறுவனங்களையும், அணு உலை விபத்துக்கு பொறுப்பு ஆக்கும் வகையில், மசோதாவில் திருத்தங்கள் செய்யப்பட்டன.
வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தினால்தான் நஷ்டஈடு தர வேண்டி இருக்கும் என்ற ஷரத்தும் நீக்கப்பட்டது. இந்த திருத்தங்களுடன், மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், அணு உலைக்கு உபகரணங்களை சப்ளை செய்யும் நிறுவனங்களையும் விபத்துக்கு பொறுப்பு ஆக்குவதற்கு அமெரிக்க நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால், மசோதாவில் மாற்றம் செய்யுமாறு இந்தியாவை வலியுறுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய அரசிடம் பேசி வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் பி.ஜே.குரோலி தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகரிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அவர், ‘’அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தை ஏற்று, அணு விபத்து இழப்பீடு மசோதாவில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். இது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா. பாராளுமன்றம்தான் உயர்ந்த அதிகாரம் கொண்டது. எனவே, அதன் அனுமதி இல்லாமல், திடீரென எந்த மாற்றமும் செய்ய முடியாது’’என்று தெரிவித்தார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




