அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கெய்ன்ஸ்வில்லி நகரில் அதிகப் பிரபமில்லாத ஒரு சிறிய கிறிஸ்தவ திருச்சபையின் பாதிரியார் டெரி ஜோன்ஸ். கடந்த 9/11 தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் 'பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை' என்ற பெயரில், வரும் 11 ஆம் தேதி முஸ்லிம்களின் புனித வேதமான குர்ஆனை எரிக்கப் போவதாக அவர் அறிவித்திருந்தார்.
இதற்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் இவ்விவகாரம் உலகளாவிய அளவில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியதோடு, உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. கிறிஸ்த மதத் தலைநகரான வாடிகன் உட்பட உலக நாடுகள் பலவும் கண்டனங்களைப் பதிவு செய்யத் தொடங்கின.
சர்வதேசப் பிரச்னையாக உருவெடுத்துள்ள இப்பிரச்னையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அமெரிக்க அரசுக்கு நெருக்கடி அதிகரித்த வண்ணம் உள்ளது. மதவெறி பிடித்த கிறிஸ்தவ பாதிரியாரின் இந்தத் திட்டத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்தச் செயலால் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படை வீரர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறியுள்ளார். பாதிரியார் உடனடியாக
தனது முடிவை விலக்கிக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் "அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளது," என இன்டர்போல் எச்சரித்துள்ளது. வெளிநாட்டிலுள்ள அமெரிக்கர்கள் பத்திரமாக இருக்குமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் உஷார் படுத்தியுள்ளது.
பாதிரியாரின் அறிவிப்புக்கு உலக அளவில் கண்டனங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. பாகிஸ்தான் அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புனித குர்ஆன் எரிப்பு என்பது வெறுக்கத்தக்க செயல். உலகம் முழுவதும் இருக்கும் இஸ்லாமியர்களின் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்த வல்லது.' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடி தீர்வு காணுமாறு இந்தியாவும் இந்தோனேஷியாவும் ஒபாமா நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளன.
சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் எவர் மனதையும் புண்படுத்தாத வகையில் அமெரிக்க அரசு தீர்வுகாணும் என சில நாடுகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
இந்நிலையில், பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் புனித குர்ஆனை எரிக்கும் திட்டத்தைக் கைவிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி அல்ஜஸீரா செய்தி வெளியிட்டு உள்ளது. தகர்க்கப்பட்ட மையம் அருகே செயல்பட்டு வந்த இஸ்லாமிய வழிபாட்டுத்தலத்தை இடம் மாற்றிக் கொள்வதாக அதன் இமாம் தெரிவித்திருந்தாரென்றும், அதன் காரணமாக குர்ஆன் எரிப்புத் திட்டம் கைவிடப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. எனினும் அங்குள்ள இஸ்லாமிய மையத்தை இடமாற்றம் செய்யும் திட்டம் எதுவுமில்லை என்று சம்பந்தப்பட்ட மையத்தின் தலைமை இமாம் தெரிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 11 ஐ அமெரிக்க துக்க தினமாக அனுசரித்து வருகிறது. இந்நிலையில் முஸ்லிம்களின் நோன்புப் பெருநாள் அமெரிக்காவின் சில பகுதிகளில் செப்டம்பர் 11 அன்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




