இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ஈகைத் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து

E-mail அச்செடுக்க

இன்று உலகெங்கும் ரமலான் பண்டிகை என்கிற ஈகைத் திருநாள் முஸ்லிம்களால் கொண்டாடப்படுவதால், தலைவர்கள் முஸ்லிம் மக்களுக்கு வாழ்த்து செய்திகளை தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா: ‘ஈத்’ திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது ‘ஈத்’ திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மனிதர்களுக்கு நேர்வழியையும், சத்தியத்தையும் உணர்த்தக்கூடிய மாதமாகவும், சாதிக்கும் எண்ணத்தை உருவாக்கக்கூடிய மாதமாகவும், தர்மம் செய்வதற்கு உகந்த மாதமாகவும், உண்மையான ஏழை, எளியவர்களை அடையாளம் கண்டு துயரங்களை துடைத்துவிடுகின்ற மாதமாகவும் ரமலான் மாதம் விளங்குகிறது.

இந்த மகத்தான ரமலான் மாதத்தில் புனித நோன்பினை மேற்கொண்டு, இறை உணர்வுடன் ஈகைத் திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் இனிய ஈத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதுடன், அனைவரின் வாழ்விலும் அன்பு, அமைதி, இரக்கம், கருணை, ஒற்றுமை உணர்வு, சகோதரத்துவம் போன்ற நற்பண்புகள் மேலோங்கட்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், புனித இஸ்லாம் வலியுறுத்திய நோன்புப் பெருநாட்களைத் தொடர்ந்து ஈகைத் திருநாளாக இஸ்லாமியப் பெருமக்களால் போற்றி வணங்கப்படும் ரம்ஜான் பண்டிகை உலகெங்கும் உவகையோடு கொண்டாடப்படுகிறது. அண்ணல் நபிகள் நாயகம் அருளிய அறநெறிக்கேற்ப ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான முப்பது நாட்கள் நோன்பிருந்து வசதி படைத்தோரும் பசியின் கொடுமையை உணர்ந்து ஏழைஎளியோருக்கு உதவிடும் 'ஸஹாத்" என்னும் கடமையை நிறைவேற்றும் உன்னத விழா ரம்ஜான். இந்நன்னாளில் இறைவனின் இறுதித் தூதர் அண்ணல் நபிகள் நாயகம் உலகுக்கு போதித்த மனிதநேயம், நல்லொழுக்கம், அன்பு, அமைதி, சமாதானம், சகோதரத்துவம் ஆகிய உயரிய நெறிகளை ஏற்று வாழ்ந்து, நாட்டில் மத, இனப் பிரிவுகளிடையே ஒற்றுமை, ஒருமைப்பாடு மிளிர்ந்து, வன்முறைகள் ஒழிந்து நல்லிணக்கம் உருவாக அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம், உயர்வோம் என்றுகூறி அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் காங்கிரஸ் சார்பிலும், என் சார்பிலும் மனமுவந்த ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தங்கபாலு கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில், நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்திய, அசத்தியத்தை பிரித்து காட்டக்கூடியதுமான குர்-ஆனில் அருளப்பட்ட போதனைகளை இந்நாளில் நினைவு கூர்ந்து அவற்றை கடைப்பிடிக்க சூளுரைத்துக் கொள்வோம். அனைவரும் ஒன்று திரண்டு மதுவென்னும் பாவத்தை ஒழிக்க பாடுபடுவோம் என இந்த நன்னாளில் சபதமேற்று செயல்படுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட செய்தியில், பகுத்துண்டு பல்லுயில் ஓம்பும் பண்பாட்டுத் திருநாளாம் இப்பெருநாளில், சமய நல்லிணக்கம் செழிக்கவும், சமூக ஒற்றுமை தழைக்கவும் பாடுபடுவோம் எனச் சூளுரைத்து, ம.தி.மு.க. சார்பில் இஸ்லாமிய மக்களுக்கு நெஞ்சார்ந்த ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மாதங்களில் இஸ்லாமியர்களுக்கு ரமலான் மாதம் புனிதமானது. ஒருபுறம் இல்லாதவர்கள் பெருகியும், மறுபுறம் செல்வந்தர்கள் அதிகரித்தும் இருப்பதால், சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வு ஏற்பட்டு சகோதரத்துவம் சீர்குலைக்கப்படுகிறது.  இல்லாதவர்கள் அனுபவிக்கும் இன்னலை அனைவரும் உணரச் செய்வதற்கே, நபிகள் நாயகம் நோன்பு இருப்பதை ஒரு முக்கிய கடமையாக இஸ்லாமியர்களுக்கு எடுத்துரைத்தார். அதன்படி தங்களை வருத்திக் கொண்டு நோன்பினைக் கடைப்பிடித்த இஸ்லாமிய பெருமக்களுக்கு எனது இதயமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்