நாகர்கோவில்: நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. ராதாபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு காமராஜர் பெயர் வைக்கக் கோரி சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் நடத்திய காங்கிரஸ்காரர்கள் மீது, கமிட்டியினரே போலீசில் புகார் செய்தனர்.
மாநிலத்தில் காங்கிரசின் திருப்தியற்ற செயல்பாடு பற்றி மேலிடத்தில் சொல்லியுள்ளோம். தமிழக காங்கிரஸ் தலைமை மற்றும் மாவட்ட காங்கிரஸ் தலைமைகள் தாங்கள் ஈடுபடும் செயல்களில் உறுதியுடன் இருக்க வேண்டும்.தமிழகத்தில் பல அரசியல் கட்சித் தலைவர்களின் வீடுகள், வாகனங்கள், அலுவலகங்கள் தொடர்ச்சியாக தாக்கப்படுகின்றன. சில நடிகர்களின் வீடுகளும் தாக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவங்கள் குறித்து போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனென்றால் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது என்றார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




