புதுடெல்லி: ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் தூக்கு தண்டனை கைதிகள் 14 பேரின் கருணை மனுக்களை ஏற்று அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துள்ளார்.
இதனால் நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின் தண்டனையும் இதேபோல குறைக்கப்படுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது கடந்த 2 மாதங்களில் இந்த 14 பேரின் கருணை மனுக்களை ஏற்றுள்ளார் பிரதீபா. இதில், தனிப்பட்ட விரோதம் காரணமாக 17 பேரை கொன்ற பியாரா சிங் மற்றும் அவரின் மூன்று மகன்களான சரப்ஜித் சிங், சத்னாம் சிங், குருதேவ் சிங் ஆகியோரும் அடக்கம். இவர்களின் கருணை மனுக்கள் 1991ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சொத்தை அபகரிப்பதற்காக தனது மாமா மற்றும் அவரின் மூன்று சிறிய குழந்தைகள் உட்பட ஐந்து பேரை ஒட்டு மொத்தமாக கொன்ற தமிழகத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் உத்தரப் பிரதேசத்தில் வீடு புகுந்து மூன்று பேரைக் கொன்று, அவர்களின் தலையை துண்டித்து ஊர்வலமாக கொண்டு சென்றதோடு, பத்து வயது சிறுவனை சுட்டுக் கொன்று, அவனது உடலை தீயில் வீசிய செரோம், ஷியாம் மனோகர் மற்றும் 4 பேரின் மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த மறு ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், இவர்களின் தண்டனையை ஜனாதிபதி குறைத்துள்ளார். இது குறித்து உள்துறை அமைச்சகம் அளித்துள்ள விளக்க அறிக்கையில், இந்தக் கொலைகாரர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டாலும் அவர்கள் சாகும் வரை சிறையில் தான் இருக்க வேண்டும். பரோலில் அவர்களை ஒருபோதும் விடுவிக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த 14 பேரின் தண்டனை குறைக்கப்பட்டதற்கு பல தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




