மேற்கு வங்காள மாநிலத்தில் ராகுல் காந்தி 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். 2வது நாளான நேற்று, ஜல்பைகுரி நகரில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, வருகிற சட்டசபை தேர்தலில், மேற்கு வங்காளத்தில் இடதுசாரி கட்சிகளின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக திரிணாமுல் காங்கிரசுடன் கூட்டணிக்காக கைகொடுப்போம். அதே நேரத்தில், யாருக்கும் நாம் தலை வணங்க மாட்டோம். கூட்டணி உடன்பாடு கவுரவமானதாக இருக்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியை தொண்டர்கள் பலப்படுத்த வேண்டும். இங்கு மாற்றம் வருவது அவசியம். சட்டமன்ற தேர்தலுக்குப்பின் நிச்சயம் மாற்றம் வரும். தேர்தல் நேரத்தில் காங்கிரசில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் போய்ச் சேருகிறவர்கள் பற்றி கவலை இல்லை.
இங்கு இரண்டு வங்காளங்கள் உள்ளன. ஒன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கானது. அதன் தொண்டர்கள் தங்களுக்காக இங்கு எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். மற்றொன்று, ஏழைகளுக்கான வங்காளம். அவர்களுக்கு உண்ண உணவோ, தங்குவதற்கு குடிசையோ இல்லை என்றார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




