

சாதி வாரி கணகெடுப்பை ஹிந்துத்துவ தேசியவாத கொள்கையுடைய ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பது ஏன்? - தம்பி ராஜா, தஞ்சை
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோரின் மக்கட்தொகைக் கணக்கு வெளிவரும்போது அவ்வச்சாதிகளின் உரிமைக்குரலே ஓங்கி ஒலிக்கும். ராஜஸ்தானில் குஜ்ஜார்கள் வெளிப்படுத்தியது போல... எட்டு மாதமே ஆண்ட வி.பி.சிங், 1990ஆம் ஆண்டு ஆகஸ்டில் மண்டல் குழு அறிக்கையை அமல்படுத்துவதற்கான ஆணையில் கையெழுத்திட்டார்.
மண்டல் கமிஷன் அறிக்கையை விபி சிங் வெளியிட்ட பின்னர் அதன் விளைவை உடனடியாக உணர்ந்து கொண்ட ஆர் எஸ் எஸ், பாபர்மசூதிப் பிரச்சனையைக் கிளப்பியது. அத்வானியின் ரதயாத்ரா, இந்தியாவைக் குலுக்கியது. இப்போது சாதிவாரிக் கணக்கெடுப்பு வந்தால் மீண்டும் கிளப்ப உடனடிப் பிரச்சனை ஏதும் கைவசம் இல்லா நிலையில் சாதிவாரிக் கணக்கெடுப்பையே எதிர்ப்பது ஒன்றுதான் வழி.
விமான நிலையங்களுக்கும் பேருந்து நிலையங்களுக்கும் அவை அமைந்திருக்கும் இடத்தின் பெயரைத் தவிர்த்து தலைவர்களின் பெயர்களை சூட்டுவது சரியா? - சாலிஹ், நாகை
தவறில்லை. உலகெங்குமுள்ள நடைமுறைதான் இது. ஆனால் இந்தியாவில் -- குறிப்பாகத் தமிழ்நாட்டில் வாக்கு வங்கி அரசியல் காரணமாக சாதித் தலைவர்களின் பெயர்களைச் சூட்டுவதால் கலவரம்தான் கண்ட பலன்.
வணங்காமுடி அய்யா விரதம் இருப்பதுண்டா ? - கே. யனாபதி, முசிறி
உண்டு. உண்ணாவிரதம் மட்டுமின்றி அவ்வப்போது மவுன விரதமும் எழுதா விரதமும் இருப்பதுண்டு.
வழுக்கி விழுந்தவள் என்று தானே சொல்லப்படுகிறது.. ஏன் ஆண்கள் யாரும் வழுக்கியே விழுவதில்லையா? - மருதன், விருதாச்சலம்
இதேபோன்ற கருத்தில் அமைந்த வினாக்களுக்கு முன்னர் இருமுறை விடையளித்துள்ளேன்.
கற்பிழந்தவள் என்பதைக் குறிக்க வழங்கப்படும் சொல் இது.
கற்பு என்பதைப் பெண்களுக்கு மட்டும் பொருத்திப் பார்ப்பதால் வந்த ஆணாதிக்க வெளிப்பாடு இது.
இதிகாசங்களும் காப்பியங்களும் பெண்களின் கற்பின் பெருமையை மட்டும் பறைசாற்றியதால் ஆண்களுக்கு வசதியாகப் போயிற்று.
"இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன்" என்ற இராமனின் கற்பை விட, சீதையின் கற்பு மக்களால் விதந்து பேசப்படுகிறது.
கணவனைக் கூடையில் வைத்து விலைமகள் வீட்டுக்குச் சுமந்து சென்ற நளாயினியின் கற்பு விதந்து பேசப்படுகிறது.
மாதவியிடம் மடங்கிப்போன கோவலனுக்குக் காற்சிலம்பைக் கழற்றிக் கொடுத்த கண்ணகியின் கற்பு புகழப்படுகிறது.
"பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்" எனத் திருக்குறள் கூறுகிறது.
இதனால் ஆண்களுக்கு "அது" தேவை இல்லை எனத் தோன்றிவிட்டது.
விலங்கு (பொலீஸ் மாமா வைத்திருப்பார்), விலங்கு (மிருகம்) இரண்டுக்கும் ஏதாவது ஒற்றுமை உள்ளதா? குறிப்பு : என் சினேகித பொடியன்கள் தொந்தரவு தாங்கல, அதனாலதான் உங்களிடம் கேட்டேன். - ரிஸ்வி, மாவனல்ல, இலங்கை. குமார்
எல்லா மொழிகளிலும் பல்பொருள்களைத் தரும் ஒருசொல்லும் ஒரே பொருளைத் தரும் பல சொற்களும்உள்ளன.நேர் எதிரிடையான இரு பொருட்களைத் தரும் சில சொற்களும் உள்ளன. தாய் மொழியை முதலில் சரியாகப் புரிந்து கொண்டால் இப்படி வரும் நூற்றுக்கணக்கான சொற்களை அறிய முடியும்.
வணங்காமுடி ஐயா, கேள்விகள் பிறப்பது கடினம், பதில் எளிது எனவே கேள்வி கேளுங்கள். என்று சில வருடங்களுக்கு முன் மதன் சார் எழுதியதை படித்தேன். என்னுடைய கேள்விகளை பார்க்கும்போது எதிர்காலத்தில் நான் பெரிய அறிவாளியாக வர வாய்ப்பு உள்ளதா? - அறிவழகன், காந்தல், நீலகிரி மாவட்டம்
வினாக்கள் பிறப்பது கடினம் என மதன் சொன்னதை ஒப்புக்கொள்கிறேன். நமது இந்நேரம் தளத்துக்கு வரும் வினாக்களின் தரத்தைப் பார்க்கும்போது அது புலனாகிறது. " என்னுடைய கேள்விகளை பார்க்கும்போது எதிர்காலத்தில் நான் பெரிய அறிவாளியாக வர வாய்ப்பு உள்ளதா? " என வினவியுள்ளீர்களே? இந்த ஒரே ஒரு வினாவில் அப்படி என்ன அறிவு வெளிப்பட்டுவிட்டது? பொதுவாக வினாக்கள் எழுப்பப்படுவது அறிந்துகொள்வதற்காகவே எனும்போது, அளிக்கப்படும் விடைகளால் நீங்கள் அறிவாளியாகும் வாய்ப்பு உள்ளது.

ஒபாமா குறித்து வணங்காமுடியாரின் கருத்து என்ன? உலக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி வருகிறாரா? - அகமது
ஒபாமாவின் மீது துவக்கத்தில் உலகம் மக்கள் வைத்திருந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.
மற்றொரு அமெரிக்க அதிபர்.
அமெரிக்க அதிபர் அந்நாற்காலியில் ஒரு "ரோபோட்" அவ்வளவே.
அந்த நாற்காலியை இயக்குபவர்களாது விருப்பம்தான் வெல்லும்.
குரான் எரிக்க போவதாக சொன்ன பாதிரியாரின் செயல் வெறும் ஸ்டண்ட் தானா - துரை, சிதம்பரம்
அமெரிக்காவிலுள்ள சர்ச்சின் குர்ஆன் எரிப்பு போராட்டம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? - பக்ருத்தீன், நீடாமங்கலம்.
இரு வினாக்களுக்கும் ஒரே விடை.
ஓர் அமெரிக்க பாதிரியார், முஸ்லிம்களின் புனித நூலான குரானை எரிக்கப் போவதாக அறிவித்தது வெறும் விளம்பர ஸ்டண்ட் இல்லை.
உண்மையிலேயே குரானை எரித்துத் தம் எதிர்ப்பைக் காட்டவே அவர் விரும்பியிருக்க வேண்டும்.
வெறும் விளம்பரத்துக்காகக் கோடிக்கணக் கானோர் பின்பற்றும் ஒரு மதத்தின் புனித நூலை எரிக்கப்போவதாக யாரும் சொல்ல மாட்டார்கள். வெறுப்பினாலேயே அவர் சொன்னார்.
உலகெங்கும் பின்னி வைத்திருக்கும் பலமான உளவு வலைத் தொடர்புடைய அமெரிக்கா, குரான் எரிக்கப்பட்டால் ஆப்கானிலும் பாகிஸ்தானிலும் இருக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் உலகில் பல நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்களுக்கும் ஏற்படும் உயிராபத்து, அமெரிக்காவில் ஏற்படும் தீவிரவாதத் தாக்குதல், அமெரிக்காவின் ராணுவத் தளங்களாக விளங்கும் கத்தர், பகரைன் போன்ற முஸ்லிம் நாடுகளுடனும் அமெரிக்காவின் நண்பர்களான யூ ஏ இ ., ஸவூதிஅரேபியா மற்றும் ஜோர்டான் போன்ற முஸ்லிம் நாடுகளுடனும் ஏற்படும் ராஜதந்திர உறவுச் சிக்கல், அதனால் உருவாகும் அமெரிக்காவின் வியாபார முடக்கம் போன்றவற்றை, அந்தப் பாதிரிக்கு உணர்த்தியிருக்க வேண்டும்.
அமெரிக்காவுக்கோ அமெரிக்கர்களுக்கோ இழப்பு ஏற்படுவதை எந்த அமெரிக்கனும் விரும்பமாட்டான். அதனாலேயே அப்பாதிரியார் குரான் எரிப்பைக் கைவிட்டிருப்பார்.
பள்ளிக்கு செல்வதாகக் கூறிவிட்டு பூங்காக்களில் சுற்றும் மாணவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன? - அன்பு
நானும் அப்படிச் சுற்றியவனே!
மாணவர்களை வகுப்பறையில் பிடித்து வைக்கும் திறனுடைய ஆசிரியர்கள் இருந்தால் அவர்கள் ஏன் வகுப்பைப் புறக்கணிக்கிறார்கள்?
கரும்பைச் சுற்றும் எறும்பாக மாணவர்கள் இருக்க வேண்டும். அந்தத் திறமை ஆசிரியர்களிடம் இருக்க வேண்டும்
ஒபாமா முஸ்லிமா? - சபாபதி, அய்யம்பேட்டை
கிருத்துவன்.
அப்படி அவரே அறிவித்துக் கொண்டபின் உங்களுக்கு ஏன் ஐயம்?
பத்திரிகை, அரசியல் கட்சி - இதில் எதனை ஆரம்பித்து தொடர்ந்து நடத்துவது எளிது அய்யா? -தமிழ்ச்செல்வன், வெள்ளமடம்
அரசியல் கட்சி.
பத்திரிகை நடத்துவது என்பது பெரும் போராட்டம் ஆகும்.
அச்சுத் தொழில் நச்சுத் தொழில்

விநாயகர் சதுர்த்தி பற்றி உங்கள் நிலைபாடு என்ன? - விஜயா, தஞ்சை
அது இந்துமதப் பன்டிகைக்ளுள் ஒன்று. வீடுகளில் களிமண்ணால் சிறு பிள்ளையார் உருவம் பிடித்து வைத்து அரிசிமாவில் கொழுக்கட்டை வேகவைத்துப் படைத்து வழிபடுவர்.பின் அப்பிள்ளையார் உருவத்தை வீட்டுக் கிணற்றிலோ குளத்திலோ போட்டு விடுவர். இவ்வழிபாட்டினால் பிறருக்கோ அரசுக்கோ சுற்றுப்புறச் சூழலுகோ எவ்விதப் பாதிப்பும் ஏற்பட்டதில்லை.
இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயன் மகாராட்டிர மாநிலத்தில் மக்கள் ஒன்றுகூடத் தடை விதித்திருந்தபோது பாலகங்காதர திலகர் விநாயக சதுர்த்தியைப் பயன்படுத்தி மக்களை ஒன்ரு திரட்டி தேசபக்தியை ஊட்டினார். அதைத் தொடர்ந்து இன்றுவரை மும்பையில் பிரமாண்டமான முறையில் அவ்விழா நடைபெற்று வருகிறது.
தென்தமிழ்நாட்டின் நெல்லை மீனாட்சிபுரத்தில் 1980 களில் நடந்த ஒட்டுமொத்த மதமாற்றம் இந்தியாவில் ஏற்படுத்திய அதிர்வலைகளால், வடநாட்டில் இருந்து இந்துத்துவக் கட்சிகள் தமிழ்நாட்டுக்கு வந்தன. ஆனால் வாயில் நுழையா வடமொழிப் பெயர்களில் அமைந்த அவற்றால் தமிழர்களை-- குறிப்பாக அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தை --அணுக முடியவில்லை. அதனால் இந்துமுன்னணி எனும் தமிழ்ப்பெயரில் அறிமுகம் ஆயினர்.
தங்களைப் பெரிய அளவில் அறிமுகப்படுத்த மும்பை பாணியில் ஆரம்பிக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் பிற மத வழிபாட்டுத் தலங்களின் முன் மதக்கலவரங்களை உருவாக்கியது. இவ்வாண்டு முத்துப்பேட்டை,கூத்தாநல்லூர், கோவை போன்ற இடங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியதோடு இந்து இயக்கத்தவர் ஒருவரே கூட இப்பிரச்சனையால் கொல்லப்பட்டார். எந்த மத வழிபாடும் பிற மக்களுக்கோ அரசுக்கோ சுற்றுப்புறச் சூழலுக்கோ அச்சுறுத்தலை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதே வணாங்காமுடியின் கருத்து. !
காங்கிரஸ் கட்சி நேரு குடும்பத்தின் குடும்ப சொத்தா? கட்சித் தலைவராக வெளிநாட்டுக்காரரான சோனியா மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளாரே? - கண்ணன்,திருநெல்வேலி
அது அக்கட்சியின் உள்விவகாரம். அது எந்த விதத்தில் உங்களையோ பிஜேபியையோ பாதிக்கிறது?
காங்கிரஸ் கட்சியே ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் Allan Octavian Hume என்ற வேளிநாட்டுக்காரரின் முயற்சியால் துவங்கப் பட்டதுதானே?
மதுவினால் தீமை விளைகிறது எனத் தெரிந்தும் மது விலக்கை அரசு இன்னும் கொண்டு வராதது ஏன்? - ஹாஜா, துபை
இது போன்ற ஒரு வினாவுக்கு முன்னர் விடையளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மது விற்பனையால் தமிழ்நாடு பெறும் வருமானம் ஆண்டுக்கு சுமார் பன்னிரண்டாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல். இதை இழக்க எந்த அரசாவது முன் வருமா?
| கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம். |

எழுதியவர்: சபாபதி, அய்யம்பேட்டை, September 27, 2010
| < முந்தையது | அடுத்தது > |
|---|




