தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக லஞ்சம் வாங்கிய வழக்கில் ஒரு லஞ்ச ஒழிப்பு (?) அதிகாரி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ளார். அப்படின்னா இப்ப தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒருவர் லஞ்சம் வாங்குகிறாரா? என ஏடா கூடாமாக கேள்விகள் கேட்கக் கூடாது. ஒரு நேர்மையான அதிகாரி தன் துறையைச் சேர்ந்தவர் என்ற பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுத்துள்ளார் என்று எடுத்துக் கொள்ளலாம்.
யார் அந்த லஞ்ச ஒழிப்பு (?) அதிகாரி? பெயர் பெருமாள் பாண்டியன்! மதுரை லஞ்ச ஒழிப்புத் துறையில் ஆய்வாளராக வேலை பார்த்து வருபவர்.
மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவரான அசோக் குமார் ஏராளமாக லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்ததாக வந்த புகார்களைத் தொடர்ந்து சித்த மருத்துவர் அசோக் குமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் பெருமாள் பாண்டியன் அசோக் குமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளார்.
விசாரணைக்கு அசோக் குமாரை அழைத்த பெருமாள் பாண்டியன், அசோக் குமாருக்கு சாதகமாக அறிக்கை அனுப்ப ரூ 12 லட்சம் தர வேண்டும் என்றும் பணம் தரா விட்டால் அவருக்கு எதிரான ஒரு அறிக்கையைத் தயார் செய்து அனுப்பி லஞ்ச வழக்கில் சிக்க வைத்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். அதைத் தொடர்ந்து, வழக்கிலிருந்து தப்புவிக்க ரூ 5 லட்சம் பேரம் பேசி முடிவு செய்யப் பட்டு, முன் பணமாக ரூ 120,000 ஐ புரோக்கர் நமச்சிவாயம் என்பவரிடம் கொடுத்து விடுமாறு பெருமாள் பாண்டியன் அசோக் குமாரிடம் கூறியுள்ளார்.
உடனடியாக அசோக் குமார் மதுரை லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் மாரிராஜனிடம் புகார் செய்யவே, லஞ்ச ஒழிப்புத்துறையான தன் துறையைச் சேர்ந்த ஒருவர் மீதே லஞ்சப்புகார் வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக உயரதிகாரிகளுக்கு மாரிராஜன் தகவல் தெரிவித்துள்ளார். மேலதிகாரிகளிடமிருந்து கிடைத்த உத்தரவின் பேரில் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மதுரைக்குப் படையெடுத்தனர்.
லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில், டாக்டர் அசோக் குமார் லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் பெருமாள் பாண்டியனைத் தொடர்பு கொண்டு பணம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். பெருமாள் பாண்டியனும் பணத்தைப் புரோக்கர் நமச்சிவாயத்திடம் கொடுத்து விடும்படி கூறியதை அடுத்து ரசாயனப் பவுடர் தடவிய பணக் கட்டுகள் தயார் செய்யப் பட்டன. அந்தப் பணத்தைப் புரோக்கர் நமச்சிவாயத்திடம் டாக்டர் அசோக் குமார் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் புரோக்கர் நமச்சிவாயத்தைக் கையும் களவுமாகக் கைது செய்தனர்.
அதன் பின் புரோக்கர் நமச்சிவாயத்தைப் பெருமாள் பாண்டியனிடம் பேச வைத்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், பெருமாள் பாண்டியனுக்காக புரோக்கர் நமச்சிவாயம் பணம் பெற்றதை உறுதி செய்தனர். அதைத் தொடர்ந்து பெருமாள் பாண்டியன் வீட்டுக்குச் சென்று அவரிடம் விசாரணை நடத்தியதில் தான் லஞ்சம் கேட்டதை பெருமாள் பாண்டியன் ஒப்புக் கொண்டார். அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினரால் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி பெருமாள் பாண்டியன் கைது செய்யப் பட்டார். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டு சிறையில் அடைக்க பட்டனர். இருவரின் வீட்டிலும் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறை காவலர்கள், கணக்கில் வராத பல்வேறு சொத்து ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
பெருமாள் பாண்டியன், தான் பணியில் இருந்து ஓய்வு பெற்றால் அரசு பணிக் கொடையாக வழங்கும் தொகையை ஒரே பேரமாக கேட்டு அதில் பாதித் தொகைக்குப் பேரம்பேசி முடித்துள்ளார். ஒரு அசோக் குமார் தைரியமாக முன்வந்து செயல்பட்டதன் மூலம் வெளி வந்தது இது ஒன்று மட்டுமே. இவர் லஞ்சமாக இது வரை சேர்த்த தொகை எத்தனை கோடியோ யாருக்குத் தெரியும்?
சமீபத்தில் சென்னை யானைகவுனி காவல் நிலையத்தில் பணியாற்றிய 24 வயதே நிரம்பிய மகளிர் துணை ஆய்வாளர் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப் பட்டார். பணியில் சேர்ந்து சில மாதங்களுக்குள்ளேயே இப்படி அடுத்தவர்களின் ரத்தத்தை உறிஞ்ச ஆரம்பித்து விட்டால், ஓய்வு பெறும் போது இவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவாக இருக்கும் என்று நினைத்து பார்க்கவே தலை சுற்றுகிறது.
மக்களைப் பாதுகாக்க வேண்டியப் பாதுகாப்புத் துறை முதல், லஞ்ச ஒழிப்புத் துறையையும் கூட விட்டு வைக்காத இந்தப் பகல்கொள்ளையைத் தடுக்க இது வரை அரசு என்ன முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று தெரிய வில்லை. ஒரு வேளை சாப்பாட்டுக்கு வழி இல்லாத ஒருவன் பிக்பாக்கட் அடித்தால், வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட்டாலும் பூரணமாக குணமாகாத அளவுக்கு அவனை அடித்து நொறுக்கி பதம்பார்த்து விடுவதோடு, காரியமான ஒரு செக்ஷனில் வழக்கு ஒன்றையும் போட்டு ஒரு வழி பண்ணி விடுவார்கள். ஆனால் லட்சம் லட்சமாகவும் கோடி கோடியாகவும் வெளிப்படையாகத் திருடும் பெருமாள் பாண்டியன், கேதான் தேசாய் போன்ற அதிகாரமிக்கவர்கள் இவ்வாறு மாட்டும் போது, பிக்பாக்கட் அடிக்கும் சாதாரண ஒரு பிரஜைக்குக் கிடைக்கும் காவல்நிலைய பூசைகளில் எந்த ஒன்றும் கிடைக்கப்பெறாததோடு, உள்ளே இருக்கும் காலம் வரை சுகபோகமாகவும் அதிகம் போனால் ஆறு மாதத்துக்குள் அதே காவல்துறை மரியாதையோடு ஹாயாக வெளியே இறங்கி வலம்வரவும் செய்வார்கள்.
உயர் பதவிகளில் இருப்போர் வரை எவ்வித வெட்கம், மானமின்றி லஞ்சத்தில் ஊறிப்போய் இருப்பதற்கு, ரசாயனப்பவுடர் தடவி உயர் அதிகாரிகள் முன்னிலையில் தெளிவான ஆதாரத்துடன் பிடிக்கப்பட்டால் கூட, அவர்களை உடனடியாகத் தண்டிக்கவும் மீண்டும் லஞ்சம் என்பதை நினைத்தேப் பார்க்காத அளவில் கடுமையான தண்டனை வழங்கும் சட்டமும் நம் நாட்டில் இல்லாததே காரணமாகும். கடுமையான தண்டனை இல்லையேல் எந்தச் சட்டத்தாலும் எத்தகைய மோசமான தீமையையும் ஒழிக்க முடியாது - குறிப்பாக இந்தியாவைச் சீர்குலைக்கும் லஞ்சத்தை!
லஞ்சம் என்ற சொல்லைக்கேட்டாலே காததூரம் ஓடும்படியான அச்சம் வரும் வகையிலும் லஞ்ச வாங்கிக் கொழுக்கும் இத்தகைய சமூக விரோதிகளை - அவர்கள் எத்தகைய உயர் பதவிகளில் இருந்தாலும் - தண்டிக்க இயலும் வகையில் கடுமையான சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
அதற்கு முன்வர தயக்கம் எனில், சமூகத்தைச் சீரழிக்கும் விபச்சாரம், மது, சூது போன்றவற்றை அங்கீகரித்து, அவற்றுக்குத் தனிவரி விதித்து வருமானம் பார்ப்பது போல், பேசாமல் லஞ்சத்தையும் அங்கீகரித்து அதற்கென தனியாக ஒரு அமைச்சகத்தையும் அமைச்சரையும் நியமித்து, இத்தனை லஞ்சத் தொகைக்கு இத்தனை வரி என அரசே நிர்ணயித்து விடலாம். ஒழிக்க விருப்பமில்லையேல், மொத்தத்தையும் பகல் கொள்ளைக்கூட்டம் கொண்டு போவதிலிருந்து ஒரு பகுதி அரசுக்கு வருமானமாகவாவது வந்து விட்டுப்போகும்! எப்போதும் போல், உலகின் முன் தலைநிமிர்ந்து இது ஜனநாயக மக்கள் அரசு என்று மட்டும் உரக்கக்கூவிக் கொள்வோம்!

எழுதியவர்: rajasekar, October 27, 2010
ராஜசேகர்
எழுதியவர்: அமுத சுரபி ர.வீ., October 31, 2010
எழுதியவர்: pudhukkottai chellam, November 26, 2010
| < முந்தையது | அடுத்தது > |
|---|





சொரணை இருந்தால் மாற்றம் வரும்...
பை தி வே, உங்களுக்கு ஏதாவது காரியம் ஆகணுமா ?