கர்நாடக சட்டசபையில் இன்று நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மான ஓட்டெடுப்பில், எடிïரப்பா அரசை உறுதியாக தோற்கடிப்போம் என்று, மதசார்பற்ற ஜனதாதள தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி, சென்னையில் ஞாயிற்றுக் கிழமையன்று தெரிவித்தார்.கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. கட்சி ஆட்சி, சுயேச்சைகள் ஆதரவுடன் நடந்து வருகிறது. இந்த நிலையில், கர்நாடக கலால்துறை அமைச்சர் ரேணுகாசார்யா தலைமையில் 14 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும், 5 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுக்கொண்டார்கள். திடீர் திருப்புமுனையாக, ரேணுகாசார்யா உள்பட 2 பேர் மனம் மாறி, மீண்டும் எடியூரப்பா பக்கம் சாய்ந்தனர்.
இதற்கிடையே, கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் உங்கள் மேல் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு கர்நாடக சபாநாயகர் நோட்டீசு அனுப்பினார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கர்நாடக ஆளுநர் பரத்வாஜ் சபாநாயகருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னை வந்து பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கினார்கள். அதன்பிறகு, கேரளா வழியாக மும்பை, சென்று அங்கிருந்து கோவாவுக்கு சென்று மறைந்திருந்தனர். பின்னர் 17 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் சனிக் கிழமை இரவு 11 மணி அளவில் குமாரசாமியும், அவரது கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்களும் வந்தார்கள். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், அடையாறில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலின் 2-வது மற்றும் 3-வது மாடியில் தங்கவைக்கப்பட்டார்கள்.
சென்னை ஓட்டலில் கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் செய்தியை அறிந்து நேற்று காலையில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி குழுவினர் முற்றுகையிட்டனர். பெங்களூருவில் இருந்தும் கன்னட தொலைக்காட்சி குழுவினரும் வந்திருந்தார்கள். இதனால் ஓட்டல் வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. அனைவரும், குமாரசாமியையும், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களையும் சந்தித்து பேட்டி எடுக்க முயற்சித்து கொண்டிருந்தார்கள். 11 மணி அளவில் ஓட்டலில் உள்ள கூட்ட அரங்கில் 12 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 5 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுடன், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ``எங்களுக்கு கடைசியாக கிடைத்த தகவலின்படி, சில பா.ஜ.க. பிரமுகர்கள், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை காணவில்லை என்றும், அவர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள் என்றும் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளார்கள். குறிப்பாக 6 காவல் நிலையங்களில் இதுபோன்ற புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த 6 எம்.எல்.ஏ.க்களும் (அனைவரும் பா.ஜ.க.) இங்குதான் உள்ளனர். அவர்கள் அனைவரும் இப்போது உங்கள் முன் பேசுவார்கள்'' என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து, பெல்லுப்பி, டாக்டர் பக்லி, சம்பங்கி, நாகராஜ், சங்கரலிங்கே கவுடா மற்றும் ராஜு காகே ஆகிய 6 எம்.எல்.ஏ.க்கள், ``எங்களை யாரும் கடத்தவில்லை. நாங்கள் நன்கு படித்தவர்கள். எங்கள் சுயநினைவுடன்தான் இங்கு வந்திருக்கிறோம். எங்களை யாரும் கடத்தவில்லை'' என்று ஒரே கருத்தை, தனித்தனியாக கூறினார்கள்.
அதன்பிறகு, தனது பேட்டியை குமாரசாமி தொடர்ந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக கவர்னரை கடந்த 5ஆம் தேதியன்று, சில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும், சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் சந்தித்து, அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாகக் கூறி கடிதம் அளித்தார்கள். இதைத் தொடர்ந்து, சட்டசபையில் பெரும்பான்மையை 12ஆம் தேதிக்குள் நிரூபிக்கும்படி, முதல்வர் எடியூரப்பாவிடம் கவர்னர் தெரிவித்தார்.
ஆனால், எடியூரப்பா, 11-ந் தேதியன்றே (இன்று) பெரும்பான்மையை நிரூபிப்பதாக கவர்னரிடம் கூறியுள்ளார். அதற்கு இன்றுதான் கடைசி தேதி.
கடந்த ஒரு வாரமாக, பணபலம் மற்றும் அரசின் அதிகார பலத்தைப் பயன்படுத்தி, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை எடியூரப்பா மிரட்டி வருகிறார். கர்நாடக சபாநாயகரும் தனது பலத்தை துஷ்பிரயோகம் செய்கிறார். அவர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டவிரோதமாக நோட்டீசு அனுப்பி, மிரட்டி, அவர்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கிறார்கள். ஆதரவு வாபஸ் கடிதங்களை திரும்பப் பெறாவிட்டால், எம்.எல்.ஏ. பதவியை ரத்து செய்வோம் என்றும் மிரட்டியுள்ளார்கள்.
ஆனால், இந்த மிரட்டல் விடுக்கப்பட்ட பின்னரும், கர்நாடகத்தின் நன்மையை கருத்தில் கொண்டு, கர்நாடகத்தில் நடைபெற்று வரும் மோசமான, ஊழல் மிகுந்த எடியூரப்பா ஆட்சியை அகற்றுவதில் இவர்கள் உறுதியாக உள்ளனர்.
சபாநாயகர் என்ன முயற்சிகளை மேற்கொண்டாலும், எடிïரப்பா கொண்டு வரக்கூடிய நம்பிக்கை கோரும் தீர்மானத்தை நாங்கள் தோற்கடிப்பது உறுதி. சபாநாயகர், மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் பற்றிய தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. அவர்கள் என்னதான் முயற்சி மேற்கொண்டாலும், இந்த முறை எடிïரப்பா அரசு, பணபலத்தாலும், அதிகார பலத்தாலும் வெற்றி பெறவே முடியாது என்பதை உறுதியாக சொல்லிக்கொள்கிறோம். இந்த அரசுக்கு, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்.
பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களையும், சுயேச்சை எம்.எல்.ஏ.க்களையும் கூட பதவிநீக்கம் செய்யவுள்ளதாக சபாநாயகர் கூறியுள்ளார். இந்திய அரசியல் அமைப்புச் சட்ட வரலாற்றில், சபாநாயகர் ஒருவர், முதல்வரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு இந்த அளவுக்கு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாக இருக்கும். இதற்கு விதிமுறைகள் எப்படி இடம் கொடுக்கும் என்று தெரியவில்லை. எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தாலும் கூட கண்டிப்பாக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம்.
மற்ற மாநிலங்களில், இதுபோன்ற நிலை ஏற்பட்டபோது அங்குள்ளவர்கள் எப்படி செயல்பட்டார்கள் என்பதை நாங்களும் பின்பற்றுவோம். சட்டப்படி நாங்கள் செயல்படுவோம்.
காங்கிரஸ் கட்சி, இயல்பாகவே, எடியூரப்பா கொண்டு வரும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆதரிக்காது. இருப்பினும், அவர்கள் பிரதான எதிர்க்கட்சி. அவர்களது முடிவை அவர்கள் சட்டசபையில் தெரிவிப்பார்கள். அதைப் பற்றி இப்போது கவலைப்படத் தேவையில்லை.
அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு, கோடிக்கணக்கில் பணம் கொடுத்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு, நான் வாங்கியதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. அது தவறு. முன்பு, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணியை கவிழ்க்க முயற்சித்தபோது அவர்கள் கடைப்பிடித்ததை போல் நாங்களும் செயல்படுவதாக அவர்கள் கருதியிருக்கலாம். அது அவர்கள் (பா.ஜ.க.) செய்யும் வேலை. நாங்கள் வித்தியாசமானவர்கள்.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், அன்பாலும், பரஸ்பர புரிதல் அடிப்படையிலும்தான் எங்கள் பக்கம் வந்துள்ளார்கள். நாங்கள் பழைய நண்பர்கள். நாங்கள் குதிரைபேரத்தில் ஈடுபடவில்லை. இது தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடக்கும் போராட்டம்.
இவ்வாறு குமாரசாமி பேட்டி அளித்தார்.
சென்னை ஓட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை ஹெலிகாப்டரில் பெங்களூருவுக்கு அழைத்துச்செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த தகவல் கசிந்து விட்டதால், தனி விமானம் மூலம் அவர்கள் சென்னையில் இருந்து நேற்று மாலை புறப்பட திட்டமிட்டனர். இதற்காக ஓட்டலில் இருந்து பஸ் மூலமாக அவர்கள் வெளியே அழைத்து செல்லப்பட்டார்கள்.
நேராக அவர்கள் சென்னை விமான நிலையத்துக்கு சென்றனர். 3 மணி நேரம் அவர்கள் விமான நிலையத்தில் இருந்தனர்.
பின்னர் திடீரென்று அனைவரும் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அவர்கள் நேற்று இரவு சென்னை விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்ததாக தெரிகிறது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




