கர்நாடகா! தென் இந்தியாவில் கால் பதிக்க நினைத்த பாஜகவுக்கு அடைக்கலம் கொடுத்த மாநிலம். எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு தேவ கௌடாவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பங்கு போட்டுக் கொண்ட நிலையில், குமாரசாமியின் பதவிக் காலம் முடிந்தவுடன் காலை வாரினார் தேவ கௌடா. இதன் காரணமாக பாஜக ஆட்சியை இழந்து தேர்தலைச் சந்தித்தது. தேர்தலில் பெரும்பான்மையை பெறாத பாஜக, சுயேட்சைகள் ஆதரவுடன் மீண்டும் எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைத்தது.
சிக்கல்களின் கதாநாயகன் எடியூரப்பாவுக்கு இம்முறை சிக்கல் பாஜகவினுள்ளிருந்தே ரெட்டி சகோதரர்களின் மூலம் வந்தது. எடியூரப்பாவை நீக்கியே தீர வேண்டும் என்று டெல்லிக்குப் பறந்த ரெட்டி சகோதரர்கள், பல்வேறு நிபந்தனைகளின்மீது சமரச பேச்சு வார்த்தைக்குத் தயாராகி இறுதியில் எடியூரப்பா அரசு தொடர சம்மதம் தெரிவித்தனர். பதவியைத் தக்க வைக்க, எடியூரப்பா தன் ஆதரவாளரான ஷோபாவின் அமைச்சர் பதவியை ரெட்டி சகோதரர்களுக்காகப் பலிகொடுத்தார் - அதாவது ஆதரவாளரின் சீட்டைக்கிழித்தாவது தன் பதவியைத் தக்கவைத்துக்கொண்டார்.
இந்நிலையில், பாஜக அரசின் மந்திரி சபையைக் கடந்த செப்டம்பர் 22 அன்று எடியூரப்பா மாற்றி அமைத்தார். திரைமறைவில் என்ன நடந்ததோ, ஷோபா மீண்டும் அமைச்சராக்கப் பட்டார். இந்த அமைச்சரவை மாற்றத்தில் பாஜகவுக்கு ஆதரவளித்து வந்த நான்கு சுயேச்சை எம்.எல்.ஏ க்களின் பதவிகள் பறிக்கப் பட்டன. எடியூரப்பாவை விரட்டியச் நாற்காலி சிக்கல் சனி, இப்போது பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வடிவிலேயே மீண்டும் வந்தது. பதவி பறிக்கப் பட்ட பாஜக அமைச்சர்கள் உட்பட 19 சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து எடியூரப்பா அரசைக் கவிழ்க்க முயற்சி செய்தனர். பாஜக தலைமையின் தலையீட்டினைத் தொடர்ந்து, ரேணுகாச்சார்யா உள்ளிட்ட மூன்று பாஜக உறுப்பினர்கள் மீண்டும் சமாதான கொடியைப் பறக்க விட்டனர்.
இருப்பினும் ஆட்சியைத் தக்கவைக்கப் போதுமான உறுப்பினர்களின் ஆதரவினை இழந்து நின்ற எடியூரப்பாவிடம், பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுனர் உத்தரவிட்டார். பாஜக ஆட்சி கவிழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரும்பான்மையை நிரூபிப்பதாக எடியூரப்பா கூறியிருந்த நாளின் அதிகாலையில் சட்டமன்றம் கூடும் முன்னரே, ஆதரவை விலக்கிக் கொண்ட சுயேட்சை எம்.எல்.ஏக்கள் உட்பட 16 எம்.எல்.ஏ க்களைத் தகுதி நீக்கம் செய்து பாஜக அரசை காப்பாற்றினார் சபாநாயகர் போபையா. தகுதி நீக்கம் செய்யப் பட்ட எம்.எல்.ஏ க்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் வழக்கின் தீர்ப்பும் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு எம்.எல்.ஏ க்களுக்குச் சாதகமாக வந்தால், எடியூரப்பா அரசுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டு ஆட்சியை இழக்க வேண்டிய நிலை வரும்.
ஆட்சியைப் பிடிக்க எதிரும் புதிருமான தேவ கௌடாவுடனும் கூட்டணிக்குத் தயாரான பாஜக, அதே ஆட்சியைத் தக்கவைக்க உள்ளிருந்து எழுந்த ரெட்டி பூகம்பத்தைச் சமாளித்து இப்போது சுயேட்சை சுனாமியைப் பொருந்தாவிதியான "கட்சித் தாவல் தடை சட்டத்தின்" மூலம் தற்காலிகமாக கட்டி வைத்துள்ளது. எந்தக் கட்சியும் சாராமல் சுயேட்சையாக நின்று வெற்றிபெற்ற இந்தச் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் மீது "கட்சித் தாவல் சட்டம்" பாய்வது நியாயம் தான் எனில், ஆரம்பத்தில் பாஜக அரசு அமைய ஆதரவு தெரிவித்திருந்த நேரத்திலேயே பாய்ந்திருக்க வேண்டும். ஆட்சியைத் தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராகும் என்பதையே, சுயேட்சை எம்.எல்.ஏக்கள் மீதெடுத்த நியாயமற்ற நடவடிக்கை உணர்த்துகிறது. தற்போது சுயேட்சை எம்.எல்.ஏக்களின் புகாரில் தொங்கிக் கொண்டிருக்கும் கர்நாடகா பாஜக அரசின் ஆயுட்காலம், பெரும்பாலும் உயர் நீதிமன்றத்தின் சுத்தியலால் வேட்டு வைக்கப்பட்டு விடும் என்று கிட்டத்தட்ட உறுதியாகி விட்ட நிலையில், அரசியல் நாகரீகம் அனைத்தையும் காற்றில் பறத்திவிட்டு ஆட்சியைத் தக்கவைக்கும் பகீரத முயற்சியில் கர்நாடக பாஜக இறங்கியுள்ளது தெரிகிறது.
16 எம்.எல்.ஏ க்களின் தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பு வந்தாலும் பாஜக அரசுக்கு, ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள இன்னும் 7 பேர் மட்டுமே தேவை. இப்போது 106 பேரின் ஆதரவு பாஜகவுக்கு உள்ளது. "எடியூரப்பாவை மாற்றினால் அரசுக்கு ஆதரவளிப்போம்" என்று சமாதான பேச்சுக்கு வந்த 11 பாஜக எம்.எல்.ஏ க்களிடம், "இனி கட்சியில் சேர்க்க மாட்டோம்" என வெங்கையா நாயுடு உறுதிபட கூறி விட்ட நிலையில், தலையின்மீது தொங்கும் கத்தியிலிருந்து தப்பிக்க எதிரணியின் பலத்தைக் குறைப்பது ஒன்று தான் பாஜகவுக்கு ஒரே போம்வழி!
இனி அதல்லாமல், கட்சித்தாவல் தடைச் சட்டப்படி சுயேட்சை எம்.எல்.ஏக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மட்டும் தான் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளிக்குமானால், ஆட்சியைத் தக்கவைக்க பாஜகவுக்கு வெறும் 2 உறுப்பினர்களின் ஆதரவு மட்டும் கிடைத்தால் போதும். இந்தச் சிக்கலைத் தீர்க்க ஆபரேசன் தாமரை என்ற திட்டம் தீட்டப் பட்டு எதிர்க் கட்சி எம்.எல்.ஏ க்களை விலைக்கு வாங்கும் முயற்சிகளைப் பாஜக செய்து வருகிறது.
இந்த முயற்சியின் பலனாக மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த அஸ்வத், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாராயணசாமி, ராமசந்திர ராவ் ஆகியோர் தங்கள் சட்ட மன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இன்னும் பலர் ராஜினாமா செய்ய உள்ளதாகவும் எதிர்க்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதற்கு விலையாக ரூ 20 கோடி முதல் ரூ 50 கோடி வரை பணமும் மீண்டும் வரும் இடைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட சீட்டும் தர பாஜக சார்பில் பேரம் பேசப் படுவதாக செய்திகள் கசிகின்றன.
பாஜகவின் ஆபரேசன் தாமரை திட்டத்தை அறிந்த உடன், காங்கிரஸும் "அதிரடி வருமான வரிச் சோதனை" மூலம் ரெட்டி சகோதரர்களைக் குறி வைத்துள்ளதோடு, "பூண்டோடு ராஜினாமா" என்றொரு ஆலோசனையையும் செயல்படுத்த முயற்சி செய்து பார்த்துள்ளது.
ஜனநாயகம் வழங்கும் உரிமைகளின் ஓட்டைகளினூடே புகுந்து, கிரிமினல்களும் குற்றவாளிகளும் ஊழல் பெருச்சாளிகளும் பதவி நாற்காலியை அலங்கரித்து வருவது இந்தியாவில் ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க நிகழ்வுகளல்ல. நாடாளுமன்றத்தில் தற்போது அமர்ந்திருக்கும் உறுப்பினர்களில் பெரும்பாலானோரின் பயோடேட்டாவே அதனை விலாவாரியாக எடுத்துரைக்கும். பாரம்பரிய குடும்ப ஆட்சிக்கு மாற்றாக, ஊழலற்ற, ஒளிரும் இந்தியாவை நாட்டு மக்களுக்குக் கொடுப்பதாக பறைசாற்றி தேசிய அரசியலில் எழுந்து வந்த பாஜக, இன்று ஊழலின் மொத்தக்கூடாரமாக மாறியிருப்பது வெட்கக்கேடானது.
தங்களை ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த பொது மக்களின் நலனை மறந்து தங்களுடைய சுயநலனுக்காக பணத்தை வாங்கிக் கொண்டு மக்களின் வரிப் பணத்தை வீணாக்கும் இது போன்ற கயவர்கள் மீது அரசும் தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது.
ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஒரு தொகுதியில் போட்டியிட்டுத் தகுந்த காரணம் இன்றி தங்களின் சுயநலனுக்காக ராஜினாமா செய்தால், அந்தஹ் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்த எவ்வளவு செலவாகுமோ அந்தச் செலவை அந்த உறுப்பினரிடம் வசூலிக்க ஏதுவாக தேர்தல் ஆணையம் விதிகளை மாற்ற வேண்டும். மேலும் ராஜினாமா செய்த சட்ட மன்ற உறுப்பினர் தன்னுடைய ஆயுள் காலம் முழுமைக்கும் இனி எந்த தேர்தலிலும் போட்டியிடாதவாறு தடையும் விதிக்க வேண்டும்.
இது போன்ற விதிமுறைகளை தேர்தல் ஆணையம் உருவாக்கி பின்பற்றினால் எதிர்க் கட்சிக்காரன் தரும் காசுக்காக எந்த சட்டமன்ற உறுப்பினரும் விலை போக மாட்டார்கள். அரசுக்கு ஒத்து ஊதும் தேர்தல் ஆணையம் இது போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்காவிடில், மக்களைப் பற்றி சிந்திக்காமல் மக்களின் வரிப் பணத்தை சுரண்டிக் கொழுக்கும் இத்தகைய கயவர்கள் மீண்டும் ஓட்டுக் கேட்க வரும்போது, நாம் என்ன செய்ய வேண்டும் என சொல்லவும் வேண்டுமோ?

| < முந்தையது | அடுத்தது > |
|---|




