நெல்லை: நெல்லை மாவட்டத்தில் வாய் தகராறில் கணவரால் தீயிட்டு எரிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாளையங்கோட்டை குலவணிகர்புரம் மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் அழகையா இவரது மகன் சுப்பிரமணியன் (29). இவர் பூ கட்டும் தொழிலாளி. இவர் மனைவி மகேஸ்வரி (23). இவர்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. சுப்பிரமணியனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்த்தால் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துவந்தார்.
சம்பவதினத்தன்று சுப்பிரமணியன் வழக்கம் போல் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். "சாப்பாடு ஏன் தயார் செய்யவில்லை' என கேட்டு அவர் மனைவியிடம் தகராறு செய்தார். இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் மகேஸ்வரியை தாக்கினார். பின்னர் அவர் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீயிட்டு கொளுத்தினார். உடல் கருகிய படுகாயமடைந்த மகேஸ்வரி பாளை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரிடம் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் பெறப்பட்டது இதுகுறித்து மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டு பாளை. சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று மருத்துவமனையில் மகேஸ்வரி இறந்தார். இதனால் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இச்சம்பவம் குறித்து நெல்லை ஆர்.டி.ஓ., தலைமையில் விசாரணை நடந்து வருகிறது

| < முந்தையது | அடுத்தது > |
|---|




