விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் மிதவேக தொடர்வணடி காலை 6.20 மணிக்கு கடலூரை அடுத்த நெல்லிக்குப்பத்தைக் கடந்து செல்லும். இந்த தொ.வண்டி வருகைக்காக, நெல்லிக்குப்பம் தொடர்வண்டிநிலையம் அருகே உள்ள ஆலை சாலையின் இருப்புப்பாதைக்கதவு நேற்று காலை மூடப்பட்டது. அப்பகுதியில் தொடர்வண்டி சென்ற போது,
தண்டவாளத்தில் பயங்கர சப்தம் கேட்டது. தொடர்வண்டி கடந்து சென்றதும் 6.30 மணிக்கு காப்பாளர் சம்பத் அக்கதவைத் திறக்க முயன்றபோது சமிக்ஞை விடுவிப்பு ஆகாததால் தடுப்புக்கதவை திறக்க முடியவில்லை. சந்தேகமடைந்த காப்பாளர் சம்பத், தண்டவாளத்தில் ஏதேனும் பிரச்னை இருக்குமோ என பார்வையிட்டார். அச்சாலையில் பொருத்தப்பட்டிருந்த தண்டவாளத்தில் 4 செ.மீ அளவிற்கு விரிசல் ஏற்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, நெல்லிக்குப்பம் நிலைய அதிகாரிக்கு தகவல் அளிக்கவும் அதிகாரிகள் விரைந்து சென்று தண்டவாளத்தில் விரிசல் இருந்த பகுதியை பார்வையிட்டு, தகவல் கொடுத்தனர். மேலும்,போக்குவரத்து சமிக்ஞை விளக்கை சரி செய்து சாலைக்கதவை திறந்து விட்டனர்.
திருச்சி தொ.வ கோட்ட இளநிலை பொறியாளர் பிரதீப்குமார்சாம் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் காலை 9 மணிக்கு விரைந்து வந்து விரிசலிருந்த தண்டவாளத்தை அகற்றி 12 மீட்டர் நீளத்திற்கு புதிய தண்டவாளத்தை பொருத்தினர். இப்பணி மாலை 5 மணி வரை நடந்தது. அதுவரை, அவ்வழியே வந்த பயணியர் மற்றும் சோழன் விரைவு வண்டிகள், விரிசல் விட்ட தண்டவாளத்திற்கு அருகாமையில் உள்ள பாதை வழியாக திருப்பி விடப்பட்டன. தண்டவாளம் விரிசல் விட்ட பகுதியில் மாற்றுப் பாதை இருந்ததால்,தொ.வ போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
கடந்த மார்ச் மாதம் முதல் கடலூர் - விழுப்புரம் இடையே அகலப்பாதையில் போக்குவரத்து நடைபெற்றுவருகிறது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




