தொலை தொடர்பு ஊழல் தொடர்பாக அமைச்சர் ஆ.ராசாவை பதவிநீக்கம் செய்தால் நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கத்தயார் என்று கூறியிருந்த ஜெயலலிதாவுக்கு "இடம் காலியில்லை, வருந்துகிறோம்" என்று காங்கிரஸ் பதிலளித்துள்ளது.
ஜெயலலிதாவின் பேட்டி குறித்து, காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத்திடம் நிருபர்கள் கருத்து கேட்டபோது, "தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி, தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில், எங்கள் கூட்டணியில் எங்கே இடம் இருக்கிறது?'' என்ற ஆசாத் "காங்கிரஸ் கட்சி, தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து இருப்பதற்கும், மத்திய மந்திரி ஆ.ராசா மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவை இரண்டும் வெவ்வேறு விஷயங்கள்" என்றும் விடையளித்தார்.
"ஜெயலலிதா வெறுமே தனது எண்ணங்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து கூற எதுவும் இல்லை.இந்த நிமிடம் வரை காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கியமான கட்சி தி.மு.க. என்பது தெளிவு"
மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாணை நீக்கியது போல மத்திய அமைச்சர் ஆ.ராசாவை நீக்க முடியாது. காரணம் அவர் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் அல்ல. அவரை நீக்குவது தொடர்பாக தி.மு.க.தான் முடிவு செய்ய வேண்டும். மேலும், 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்னமும் தாக்கல் செய்யப்படவில்லை. அறிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன் அந்த அறிக்கையை பொது கணக்கு குழு ஆய்வு செய்யும். அந்தக் குழுவுக்கு பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்தான் தலைவராக உள்ளார்.
முதலில் இந்த இரண்டும் நடக்கட்டும். அதற்குள் எங்கள் கூட்டணிக் கட்சியும் (தி.மு.க.) சிந்திக்கட்டும்" என்று கருத்து கூறியுள்ளார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




